கைகோர்க்கும் ஹோண்டா-நிஸ்ஸான்..
பிரபல ஜப்பானிய நிறுவனமான ஹோண்டாவும், நிஸான் நிறுவனமும் இணைவது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 40 பில்லியன் அமெரிக்க டாலர்க மதிப்பு கொண்ட ஹோண்டா நிறுவனம், 10 பில்லியன் மதிப்பு கொண்ட நிஸானுடன் கைகோர்த்துள்ளது. கூட்டு நிறுவனம் வரும் 2026-ம் ஆண்டு செயல்பாட்டுக்கு வரும் என்றும் இறுதிகட்ட இணைவு வரும் ஜூன் 2025-ல் முடியும் என்றும் கூறப்படுகிறது. 191 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு விற்பனை செய்ய அந்த நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. உலகின் முக்கியமான இரண்டு கார் தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து புதிய பிராண்டை உருவாக்குவதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. உலகளவில் ஆட்டோமொபைல் துறையிலேயே இது முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. சீனா மற்றும் அமெரிக்காவில் போதிய விற்பனை இல்லாமல் நிஸான் அண்மையில் 9ஆயிரம் பேரை வேலையைவிட்டு தூக்க திட்டமிட்டது. அதே நேரம் 20விழுக்காடு உற்பத்தியை நிறுத்தவும் திட்டமிட்டது. ஹோண்டாவின் விற்பனையும் எதிர்பார்த்த அளவில் இல்லை. சீனாவில் பிஒய்டி நிறுவனம் அசுர வேகத்தில் வளர்ந்ததால் ஹோண்டா,நிஸான் கார்களின் விற்பனை படுமோசமாக அமைந்தது. ஹைப்ரிட் மற்றும் மின்சார கார்களை சீனா அதிகளவில் உற்பத்தி செய்வதாலும், குறைவான விலையில் விற்பதாலும் உலகளவில் சிக்கல் நிலவி வருகிறது.
