வங்கியல்லாத நிதி நிறுவனங்களுக்கு ஜாக்பாட்..

கடன்களை அதிகரிக்கவும், அதிக பணப்புழக்கம் இருக்கவும் மத்திய ரிசர்வ் வங்கி, கடந்த வியாழக்கிழமை புதிய அறிவிப்பை வெளியிட்டது. அதில் வங்கி இல்லாத நிதி நிறுவனங்கள், நுண்கடன் நிறுவனங்களின் ரிஸ்க் வெயிட் எனப்படும் விகிதத்தை குறைத்தது. இதன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகளில் பஜாஜ் பைனான்ஸ், ஸ்ரீராம் பைனான்ஸ், சோலமண்டலம் முதலீட்டு நிறுவனம் உள்ளிட்ட நிறுவன பங்குகளின் விலை 6% உயர்ந்தது. எல்அன்ட் டி நிறுவனத்தின் பங்குகள் 6.4% உயர்ந்தன. முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 3% வரை உயர்ந்திருந்தது. மணப்புரம் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 2% உயர்ந்தன. கடந்த நவம்பர் 2023ஆம் ஆண்டுரிஸ்க் வெயிட் அளவு 125% ஆக இருந்தது. இதனை கடந்த வியாழக்கிழமை மத்திய ரிசர்வ் வங்கி 125-ல் இருந்து 100%ஆக குறைத்தது. குறிப்பாக தனிநபர் கடன் மற்றும் கிரிடிட்கார்டு கடன்கள் மீதான ரிஸ்க் வெயிட் குறைந்திருப்பதால் மக்கள் எளிமையாக கடன் வாங்க முடியும். வங்கியில்லாத நிதித்துறை வளர்ச்சிக்கு ரிசர்வ் வங்கி வழிவிட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ரிசர்வ் வங்கியின் இந்த முயற்சிகளால் AAA மற்றும் AA ரேட்டிங் பெற்ற நிதி நிறுவனங்களின் அடிப்படை புள்ளிகள் 2-5 வரை வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் இந்த முயற்சியால் சாதாரண பொதுமக்கள் அதிக கடன் வாங்க முடியும் என்றும் அதே நேரம் வங்கியில்லாத நிதி நிறுவனங்கள் இந்த அறிவிப்பால் பெரிய ஆதாயமடைவார்கள் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.