பிரான்ஸ் நிறுவனத்தை தட்டி தூக்கிய சைடஸ் நிறுவனம்..

பிரான்ஸை தலைமையிடமாக செயல்படும் அம்ப்ளிடியூட் சர்ஜிகள் என்ற நிறுவனத்தினை வாங்க சைடஸ் லைஃப்சைன்சஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 256.8 மில்லியன் யூரோவுக்கு இந்த டீல் பேசப்பட்டு வருகிறது. உலகளாவிய மருத்துவம் சார்ந்த உபகரணங்களை தயாரிக்கவும் சைடஸ் ஆர்வம் காட்டி வருகிறது. ஆப்ளிடியூட் நிறுவனத்தின் பங்குகளில் 85.6விழுக்காடு வாங்க பேச்சு வார்த்தை நடக்கிறது.
மருந்துகள் மட்டுமின்றி மருத்துவ உபகரணங்களையும் தயாரிக்கவும், உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய நோய் கண்டறிதலிலும் அதிக கவனம் செலுத்துவதாகவும் சைடஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஷார்வில் படேல் கூறியுள்ளார். பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட முடிந்த நிலையில், யூரோநெக்ஸ்ட் பாரிஸ் பங்குச்சந்தையில் இருந்து ஆம்பிளிடியூட் நிறுவனம் வெளியேறும் என்று தெரிகிறது. ஒரு ஈக்விட்டி பங்கு 6.25 யூரோ என்ற கணக்கில் 81விழுக்காடு பங்குகள் வாங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூட்டு அறுவை சிகிச்சை சார்ந்த உபகரணங்களை இந்த நிறுவனம் தயாரிக்கிறது. பிரான்ஸ் நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதன் மூலம் சைடஸ் நிறுவனத்தின் பங்குகள் இந்திய சந்தைகளில் 1 விழுக்காடு உயர்ந்து 901 ரூபாய் 50 பைசாவாக இருந்தது. மூட்டுவலி சார்ந்த சிகிச்சை, நெஞ்சக பகுதி மற்றும் நெஃப்ராலஜி பிரிவில் வளர்ச்சியை இந்நிறுவனம் எதிர்நோக்கியுள்ளது. இந்தியாவின் மருத்துவ உபகரணங்கள் ஏற்றுமதி கூட்டு ஆண்டு விற்பனை 14 விழுக்காடாக உள்ளது. இது 3.8பில்லியன் அமெரிக்க டாலராக கடந்த நிதியாண்டில் இருந்தது. மருத்துவ உபகரணங்களை இந்தியா 80 முதல் 85 விழுக்காடு வரை இறக்குமதிதான் செய்து வருகிறது. சைடஸ் நிறுவனத்துக்கு குஜராத், மகாராஷ்டிரா, கோவா, ஹிமாச்சலபிரதேசம், சிக்கிம், அமெரிக்கா, யூரோப், லத்தீன் அமெரிக்கா, தென்ஆப்ரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி வசதிகள் உள்ளன.