23%லாபம்..மேஜிக் இல்ல லாஜிக்..
பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், ஜூலை-செப்டம்பர் காலாண்டில், கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 23.1 சதவீத ஒருங்கிணைந்த நிகர லாப வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
2025-26 இரண்டாம் காலாண்டில், இந்நிறுவனத்தின் வருவாய் 3.7 சதவீதம் அதிகரித்து, ₹4,841 கோடியாக உயர்ந்துள்ளது. வட்டி, வரி மற்றும் தேய்மானத்திற்கு முந்தைய லாபம் 21.5 சதவீதம் அதிகரித்து ₹1,003 கோடியாக உயர்ந்துள்ளது. அதன் நிகர லாபம் ₹654 கோடியாக இருந்தது.
“சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி குறைப்பு, நுகர்வோர் தேவையைத் தூண்டுவதற்கும் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் ஒரு வரவேற்கத்தக்க செயல்பாடாகும். இருப்பினும், விநியோகச் சங்கிலி, வர்த்தகம் மற்றும் முகவர்களுக்கு இந்த ஜிஎஸ்டி மாற்றம் தொடர்பான இடைக்கால சவால்கள், காலாண்டின் பிற்பகுதியில் குறுகிய கால தாக்கத்தை ஏற்படுத்தின. இது வரும் காலாண்டில் படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸின் துணைத் தலைவர் வருண் பெர்ரி கூறியுள்ளார்.
இந்நிலையில், பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக ரக்ஷித் ஹர்கவேவை ஐந்து ஆண்டுகளுக்கு நியமித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அவரது நியமனம் டிசம்பர் 15-இல் அமலுக்கு வரும் என்றும், நிறுவனத்தின் உறுப்பினர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டது என்று தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பு அவர் ஆதித்யா பிர்லா குழுமத்தின் பெயிண்ட்கள் பிரிவான பிர்லா ஓபஸில் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்தார்.
“ஹார்கேவ நவம்பர் 2021 இல் பிர்லா ஓபஸில் சேர்ந்தார். அதன் பெயிண்ட் உற்பத்தி பிரிவின் தொடக்க நிலையிலும் வணிகத்தின் ஆரம்ப வளர்ச்சியிலும் குறிப்பிடத்தக்க பங்காற்றினார். ஒரு உயர் செயல்திறன் கொண்ட குழுவை உருவாக்க உதவினார். இந்த நான்கு ஆண்டு காலத்தில், நாடு முழுவதும் ஆறு ஒருங்கிணைந்த உற்பத்தி வசதிகள் உருவாக்கி, விநியோகச் சங்கிலி நெட்வொர்க்குகளை மேம்படுத்தினார்” என்று கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் சமீபத்தில் பங்குச் சந்தையில் தாக்கல் செய்த அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது
