அமெரிக்காவில் இருந்து Happy News..!!
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் பகுதி இறுதி கட்டத்திற்கு அருகில் உள்ளது என்றும், இது பல இந்திய தயாரிப்புகள் மீது அமெரிக்கா விதித்துள்ள பரஸ்பர இறக்குமதி வரிகளை குறைக்க வகை செய்யும் என்று மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
“இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் (BTA) தொடர்பாக அமெரிக்காவுடன் நாங்கள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். இது இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதி நேரம் எடுக்கும். மற்ற பகுதி பரஸ்பர வரிகளை நிவர்த்தி செய்யக்கூடிய ஒரு தொகுப்பு. நாங்கள் இரண்டு அம்சங்களிலும் பணியாற்றி வருகிறோம். ஒப்பந்தத்தின் முக்கிய பகுதியான பரஸ்பர வரிகள் பிரச்சனை விரைவில் தீர்க்கப்படும் என்று நம்புகிறோம்” என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.
ஆகஸ்ட் மாதத்தில், அமெரிக்க அரசு பல இந்திய பொருட்களுக்கு 50 சதவீத இறக்குமதி வரியை விதித்தது. இதில் ரஷ்ய எண்ணெய் கொள்முதலுக்கான 25 சதவீத தண்டனை வரியும் அடங்கும். தற்போது முன்மொழியப்பட்டுள்ள ஒப்பந்தம் இந்தியாவின் மீதான இந்த 25 சதவீத அபராத வரி பிரச்சினையை தீர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இல்லையெனில் இந்த ஒப்பந்தத்திற்கு எந்த அர்த்தமும் இருக்காது என்று அந்த அதிகாரி கூறினார்.
அக்டோபரில், அமெரிக்காவிற்கான ஏற்றுமதி 8.6 சதவீதம் குறைந்து 630 கோடி டாலராக இருந்தது. அமெரிக்காவிற்கான ஏற்றுமதிகளில் முக்கிய பங்காற்றும் பிரிவுகளில் மின்னணு பொருட்கள், பொறியியல், மருந்துகள் மற்றும் ஜவுளி ஆகியவை அடங்கும் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். ஜவுளி தவிர, இந்த துறைகளில் பெரும்பாலானவை பரஸ்பர வரிகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், அமெரிக்கா பல இந்திய விவசாயப் பொருட்களின் மீதான இறக்குமதி வரிகளை நீக்கியுள்ளது.
2024-25 ஆம் ஆண்டில் தொடர்ந்து நான்காவது ஆண்டாக அமெரிக்கா இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக இருந்தது. அமெரிக்காவிற்கான இந்திய ஏற்றுமதி கடந்த ஆண்டில் 8,650 கோடி டாலராக, இந்தியாவின் மொத்த பொருட்கள் ஏற்றுமதியில் 18 சதவீதமாக இருந்தது
