அமெரிக்காவின் புதிய ஃபெட் கவர்னர் ரெடி??
அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கியின் அடுத்த தலைவராக நியமனம் செய்ய,
தனது விருப்பத்திற்கு உரியவரை அடையாளம் கண்டுகொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். அதே வேளையில், ரிசர்வ் வங்கியின் தற்போதைய தலைவர் ஜெரோம் பவலை நீக்குவதை தனது சகாக்கள் தடுப்பதாக கூறினார்.
அடுத்த ரிசர்வ் வங்கி தலைவருக்கான தேடலை வழிநடத்தும் நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட், இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் பற்றி கூறியுள்ளார். தற்போதைய பெடரல் ரிசர்வ் ஆளுநர்கள் கிறிஸ்டோபர் வாலர் மற்றும் மிஷேல் போமன், முன்னாள் பெடரல் ரிசர்வ் ஆளுநர் கெவின் வார்ஷ், வெள்ளை மாளிகை தேசிய பொருளாதார கவுன்சில் இயக்குனர் கெவின் ஹாசெட் மற்றும் பிளாக்ராக்கின் நிர்வாகி ரிக் ரைடர் ஆகியோர் இந்த பட்டியலில் உள்ளதாக கூறியுள்ளார்.
இந்த பட்டியலில் உள்ள வேட்பாளர்களை டிரம்ப் பாராட்டியுள்ளார். ஆனால் இவர்களில் யாரை தேர்வு செய்ய உள்ளார் என்பதை பற்றி அவர் எதுவும் குறிப்பிடவில்லை.
ஃபாக்ஸ் நியூஸ் சேனலுக்கு பேட்டியளித்த நிதியமைச்சர் பெசென்ட், அடுத்த மாதம் இது பற்றி இறுதி முடிவு எடுக்கப்படும் என்று நம்புவதாகக் கூறினார்.
”நாங்கள் மற்றொரு சுற்று நேர்காணல்களை நடத்துகிறோம். பின்னர் வெள்ளை மாளிகையில் சிலர் நேர்காணல்களை நடத்துவார்கள். டிசம்பர் நடுப்பகுதியில், ஜனாதிபதி இறுதி மூன்று வேட்பாளர்களைச் சந்திப்பார், மேலும் கிறிஸ்துமஸுக்கு முன்பு ஒரு பதிலைப் பெறுவார் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
வட்டி விகிதங்களைக் குறைக்க தாமதம் செய்வதாக பவலை, டிரம்ப் பலமுறை விமர்சித்துள்ள நிலையில், பவலின் தலைவர் பதவி 2026 மே மாதத்தில் முடிவடைகிறது. ஆனால் ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் குழு உறுப்பினராக 2028 வரை அவர் பதவி வகிக்க முடியும்.
நிதியமைச்சர் பெசென்ட்டை பெடரல் ரிசர்வ் வங்கி தலைவராக நியமிக்க விருப்புவதாக டிரம்ப் மீண்டும் வலியுறுத்தினார். ஆனால் நிதியமைச்சர் பணியை விட்டு வெளியேற தனக்கு விருப்பமில்லை என பெசெண்ட் உறுதி செய்துள்ளார்
