பல துறைகளில் சரிவு – வரலாற்றில் முதல் முறை..!!
டிரம்ப் விதித்துள்ள இறக்குமதி வரிகளால் சர்வதேச வர்த்தகத்திற்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், அக்டோபரில் இந்தியாவின் டாப் 10 பொருட்கள் ஏற்றுமதிகளில், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மட்டும் வளர்ச்சியைப் பதிவு செய்தது.
எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றுமதி ஒரு வருடத்திற்கு முந்தைய காலத்தை விட 19% அதிகரித்து அக்டோபரில் 408 கோடி டாலராக இருந்த போதிலும், நாட்டின் மிகப்பெரிய ஏற்றுமதி வகையான பொறியியல் பொருட்களின் ஏற்றுமதி 16.7% குறைந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. பெட்ரோலிய பொருட்கள், மருந்து, ரத்தினங்கள் மற்றும் நகைகள், ரசாயனங்கள் மற்றும் ஜவுளி போன்ற பிற பிரிவுகளில், 5% முதல் 29% வரை சரிவு ஏற்பட்டுள்ளது.
கடந்த பல ஆண்டுகளில், ஏற்றுமதியில் இத்தனை துறைகள் சரிவை பதிவு செய்திருப்பது இதுவே முதல் முறையாகும். இந்திய ஏற்றுமதிகளுக்கு அமெரிக்கா விதித்துள்ள இறக்குமதி வரிகளின் தாக்கத்தை இது சுட்டிக்காட்டுகிறது. டிரம்ப் நிர்வாகம் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50% வரிகளை விதிக்கிறது, அதில் பாதி ஆகஸ்ட் 7 முதல் தொடங்கியது, மீதமுள்ளவை ஆகஸ்ட் 27 முதல் அமலுக்கு வந்துள்ளன.
அமெரிக்காவுக்கான ஏற்றுமதிகள் செப்டம்பரில் குறைந்துள்ள நிலையில், இந்தியாவின் இரண்டாவது பெரிய வர்த்தக கூட்டாளியான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இத்தாலி, இங்கிலாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், சவுதி அரேபியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா, தென் கொரியா போன்ற பிற நாடுகளுக்கான ஏற்றுமதிகளும் அக்டோபரில் குறைந்துள்ளன.
சீனா இந்த நாடுகளில், அடக்க விலைக்கும் கீழே பொருட்களைக் கொட்டுவதால், இந்திய ஏற்றுமதிகள் போட்டித்தன்மையற்றதாக மாறுவதே இதற்கு காரணம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். சீனா மீதான ஃபெண்டானில் தொடர்பான இறக்குமதி வரிகளை 20% இல் இருந்து 10% ஆக அமெரிக்கா குறைத்துள்ளதால், நவம்பர் மாதத்தில் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களுக்கும் இதே நிலைமை ஏற்படக்கூடும். எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களுக்கு வரிகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டாலும், சீனாவிலிருந்து வரும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மீது ஃபெண்டானில் தொடர்பான வரிகள் விதிக்கப்படுவது தொடர்கிறது. அந்த வரி இப்போது பாதியாகக் குறைக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அரசு இந்தத் துறையை ஆதரிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றுமதிகளும் பாதிக்கப்படும் என்று அஞ்சப்படுகிறது.
