RBI வங்கி அறிவுறுத்தல்..!!
மைக்ரோ கடன் நிறுவனங்கள், வாராக்கடன்களினால் அவற்றின் கணக்குகளில் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அழுத்தக் குவிப்பைக் கண்காணிக்குமாறு இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் இந்தத் துறையைப் பாதிக்கும் பல நடவடிக்கைகளுக்கு மத்தியில், ரிசர்வ் வங்கி வெளியிட்ட 2025 நிதியாண்டுக்கான வங்கித் துறையின் போக்கு மற்றும் முன்னேற்றம் குறித்த அறிக்கையில், தென்னிந்திய மாநிலங்களில் இந்த நிதியாண்டில் கடன் வழங்கல்கள் குறைவாக இருந்ததாக தெரிவித்துள்ளது.
துறையின் செயல்திறனை மேம்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அந்த அறிக்கை, “இனிவரும் காலங்களில், ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்கள் இந்தத் துறையில் ஏற்படும் அழுத்தக் குவிப்பைக் கண்காணிக்க வேண்டும்,” என்று கூறியுள்ளது.
கடந்த சில காலாண்டுகளாக, கடன் வாங்குபவர்களிடையே ஏற்பட்ட அதிகப்படியான கடன் சுமையால், மைக்ரோ கடன் நிறுவனங்கள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டன. இதைத் தொடர்ந்து இந்த துறையில் உள்ள மைக்ரோ நிதி நிறுவனங்கள் ஒன்றிணைந்து, துறை சார்ந்த பாதுகாப்பு வழிமுறைகளைத் உருவாக்கி அமல்படுத்தியுள்ளன. நுண் கடன் வாங்குபவர் ஒருவருக்கு வழங்கப்படும் கடன்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளன.
மைக்ரோஃபைனான்ஸ் இன்ஸ்டிடியூஷன்ஸ் நெட்வொர்க் (MFIN) மற்றும் சா-தன் ஆகிய சுய-ஒழுங்குமுறை அமைப்புகளால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பாதுகாப்பு வழிமுறைகள், இத்துறையில் நிலையான மற்றும் சீரான வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்தன என்று ரிசர்வ் வங்கியின் அறிக்கை கூறியது.
“இருப்பினும், மைக்ரோ கடன் துறை அழுத்தத்தை எதிர்கொண்டது. இதர NBFC-களைத் தவிர (NBFC-MFIs அல்லாத இதர வகை NBFC-கள்), மற்ற அனைத்து மைக்ரோ கடன் வழங்குநர்களும் மார்ச் 2025 நிலவரப்படி கடன் வழங்குவதில் சரிவை பதிவு செய்துள்ளன” என்று அது மேலும் கூறியது.
2022-ல் மைக்ரோ கடன்களுக்கான ஒழுங்குமுறை கட்டமைப்பை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது. மைக்ரோ கடன்களுக்கான வட்டி விகித வரம்புகளை நீக்கி, தரப்படுத்தப்பட்ட விதிகளை அறிமுகப்படுத்தியதன் மூலம், இத்துறையின் முறையான மற்றும் நிலையான வளர்ச்சிக்கு அடித்தளத்தை அமைத்தது என்றும் அந்த அறிக்கை கூறியது.
இந்தக் கட்டமைப்பு, அனைத்து தரப்பினருக்கும் நுண் கடன்கள் கிடைப்பதை மேம்படுத்துவதற்கான ஒரு பயனுள்ள கருவியாகச் செயல்படுவதன் மூலம் சமூக சமத்துவம் மற்றும் அதிகாரமளித்தலை வளர்க்கிறது என்றும் ரிசர்வ் வங்கி கூறியது.
வங்கிகளிடமிருந்து கடன் பெறும் சுயஉதவிக் குழுக்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டில் 54.8 லட்சத்திலிருந்து 2024-25-ல் 55.6 லட்சமாக அதிகரித்துள்ளது என்று கூறிய அந்த அறிக்கை, தெற்குப் பிராந்தியத்தில் கடன் வழங்கல்கள் குறைவாக இருந்ததால், வங்கிகளால் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன்களின் அளவில் ஒரு மிதமான போக்கு காணப்பட்டது என்றும் மேலும் கூறியது.
