லாபம்..!! லாபம்..!!
Moneypechu.com வாசகர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள். இந்த ஆண்டு அனைத்து வகையிலும் உங்களுக்கு சிறப்பான ஆண்டாக அமைய வாழ்த்துகிறோம்..!!
அந்நிய நிதி வெளியேற்றம், அமெரிக்க இறக்குமதி வரிகள் தொடர்பான நிச்சயமற்ற தன்மைகள், அதிகப்படியான பங்கு மதிப்பீடுகள் மற்றும் பலவீனமடைந்து வரும் ரூபாய் போன்ற பல தடைகளை எதிர்கொண்டபோதிலும், பிஎஸ்இ குறியீடான சென்செக்ஸ் 8 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்ததன் காரணமாக, கடந்த ஆண்டு இந்திய முதலீட்டாளர்கள் ரூ. 30.20 லட்சம் கோடி அளவுக்கு லாபத்தை ஈட்டியுள்ளனர்.
இந்தத் தடைகள் இருந்த போதிலும், வலுவான உள்நாட்டு முதலீட்டாளர்களின் ஆதரவு மற்றும் வலுவான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியால், பங்குச் சந்தைகள் உள்ளார்ந்த வலிமையை வெளிப்படுத்தின என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
“அந்நிய முதலீட்டாளர்களின் வெளியேற்றம் ஒரு பிரச்சனையாகத் தொடர்ந்த போதிலும், சந்தையின் மீள்திறன் நிரூபிக்கப்பட்டது. 2025-ல் இந்தியச் சந்தையின் முக்கிய உந்து சக்திகளில் ஒன்றாக வலுவான உள்நாட்டு முதலீட்டாளர்களின் ஆதரவு இருந்தது,” என்று இன்கிரெட் வெல்த் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி நிதின் ராவ் கூறினார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 29 வரை, 30 பங்குகளைக் கொண்ட பிஎஸ்இ சென்செக்ஸ் 6,556.53 புள்ளிகள் அல்லது 8.39 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்தக் குறியீடு டிசம்பர் 1 அன்று 86,159.02 என்ற தனது சாதனை உச்சத்தைத் தொட்டது.
கடந்த ஆண்டு பிஎஸ்இ-யில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ. 30,20,376.68 கோடி அதிகரித்து, ரூ. 4,72,15,483.12 கோடியாக (5.25 லட்சம் கோடி அமெரிக்க டாலர்) உயர்ந்துள்ளது.
பிஎஸ்இ-யில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மதிப்பு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் முறையாக ரூ. 400 லட்சம் கோடி என்ற இலக்கை எட்டியது.
2025-ல், அந்நிய முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையிலிருந்து, சாதனை அளவாக ரூ. 1.6 லட்சம் கோடியை (1800 கோடி அமெரிக்க டாலர்) வெளியே எடுத்தனர்.
இந்தியாவில், தொடர்ச்சியான எஸ்ஐபி முதலீடுகள், அதிகரித்த சில்லறை முதலீட்டாளர்களின் பங்கேற்பு மற்றும் நீண்ட கால வளர்ச்சி மீதான நம்பிக்கை ஆகியவை உலக சந்தைகளின் நிலையற்ற தன்மையின் போதும் ஸ்திரத்தன்மையை வழங்கியுள்ளன என்று ஸ்டாக்ஸ்கார்ட்டின் பிரணய் அகர்வால் கூறினார்.
