RCB-யை வாங்க கடும் போட்டி
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியை வாங்குவதற்கு பிளாக்ஸ்டோன் இன்க் மற்றும் டெமாசெக் ஹோல்டிங்ஸ் பிடிஇ ஆகிய நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது
ஆர்சிபி-யின் தாய் நிறுவனமான யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட்க்கு சொந்தமான டியாகோ நிறுவனம், கடந்த நவம்பரில் ஆர்சிபி அணியை விற்பனை செய்யும் செயல்முறையைத் தொடங்கியது. அட்வென்ட் இன்டர்நேஷனல், பிஏஜி மற்றும் கார்லைல் குரூப் உள்ளிட்ட உலகளாவிய கையகப்படுத்தும் நிறுவனங்களும் ஆர்சிபி-க்கான ஏலங்களை மதிப்பிட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த பரிவர்த்தனை ஆர்சிபி-க்கு 140 கோடி டாலர் முதல் 180 கோடி டாலர் வரை மதிப்பை அளிக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. இந்திய நிறுவனங்களான ஜேஎஸ் டபிள்யூ குழுமம், சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் தலைவர் ஆதார் பூனாவாலா மற்றும் மணிப்பால் மருத்துவமனைகள் போன்றவர்களும் ஆர்சிபியை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கடந்த ஆண்டு அதன் முதல் ஐபிஎல் சாம்பியன்ஷிப்பை வென்ற ஆர்சிபி அணியை வாங்க கடும் போட்டி உருவாகியுள்ளது. சீரம் நிறுவனத்தின் பூனாவாலா எக்ஸ் தளத்தில், “அடுத்த சில மாதங்களில், ஐபிஎல்-இன் சிறந்த அணிகளில் ஒன்றான @RCBTweets-க்கு, ஒரு வலுவான மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த ஏலத்தை சமர்ப்பிக்க உள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார்.
பிளாக்ஸ்டோன் அல்லது டெமாசெக் நிறுவனத்தின் முதலீடு, இந்திய விளையாட்டு துறையில் ஒரு வெளிநாட்டு தனியார் பங்கு நிறுவனத்தின் மிகப்பெரிய முதலீடாக அமையும். இதுவரை, இத்தகைய மிகப்பெரிய முதலீட்டை ஐரோப்பிய தனியார் பங்கு நிறுவனமான சிவிசி கேபிடல் பார்ட்னர்ஸ் செய்துள்ளது. இந்நிறுவனம் 2021-ல் 74.5 கோடி டாலருக்கு குஜராத் டைட்டன்ஸ் அணியின் உரிமைகளைப் பெற்று, ஒரு ஐபிஎல் அணியை முழுமையாகச் சொந்தமாக்கிய முதல் தனியார் பங்கு நிறுவனம் ஆனது. சிவிசி நிறுவனம் பிப்ரவரி 2025-ல் அந்த உரிமையின் 67% பங்கை டொரண்ட் குழுமத்திற்கு தோராயமாக 86.6 கோடி டாலருக்கு விற்றது.
அதே சமயத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் உள்ள ரெயின் குழுமத்தின் பங்குகளை வாங்குவதற்காக முதல் கட்ட ஏலங்களை பல முதலீட்டாளர்கள் சமர்ப்பித்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
