அமெரிக்க வட்டி விகிதங்களில் மாற்றமில்லை
அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் தலைவராக ஜெரோம் பவலின் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பு வட்டி விகிதங்களைச் சரி செய்ய அவருக்கு இன்னும் இரண்டு வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அவருக்கு அவை தேவைப்படாமல் போகலாம்.
புதன்கிழமை அன்று நடந்த நிர்வாகக் குழு கூட்டத்தில் ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை மாற்றாமல் வைத்திருந்த பிறகு, பவல் அமெரிக்க பொருளாதாரத்தில் ஒரு தெளிவான முன்னேற்றம் இருப்பதாகக் கூறினார். மேலும் வேலை வாய்ப்புகளுக்கான சந்தை நிலைபெறுவதற்கான அறிகுறிகளைக் காட்டுவதாகவும் தெரிவித்தார்.
ஃபெடரல் ரிசர்வ் நிர்வாகிகள் கடந்த இலையுதிர்காலத்தில் மூன்று முறை வட்டி விகிதங்களைக் குறைத்தனர். இந்நிலையில் பொருளாதாரத்தை மீட்டெடுக்க மேலும் வட்டி குறைப்புகள் தேவை என்று பரிந்துரைக்கும் எதுவும், சமீபத்திய தரவுகளில் இல்லை என்று அவர்கள் கருதுகின்றனர். ஜூன் மாதத்திற்குள் வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இருக்காது என்று ஃபியூச்ச்சர்ஸ் சந்தைகள் எதிர்பார்க்கின்றன.
அதற்குள், பவலின் தலைவர் பதவிக்காலம் முடிவடைந்திருக்கும். ஒரு புதிய தலைவர் பதவியேற்றிருப்பார். வட்டி விகித்தை தொடர்ந்து குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் ஜனாதிபதி டிரம்பின் ஆதரவாளர் ஒருவர் அடுத்த தலைவராக பதவி ஏற்க வாய்ப்புள்ளது.
ஃபெடரல் ஓபன் மார்க்கெட் கமிட்டி புதன்கிழமை அன்று, அதன் வட்டி விகிதத்தை 3.5%-3.75% வரம்பில் வைத்திருக்க 10-2 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் வாக்களித்தது. ஃபெடரல் ரிசர்வின் டிசம்பர் கூட்டத்திற்குப் பிறகு வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள், துரிதப்படுத்தப்பட்ட வளர்ச்சி, தணிந்த பணவீக்கம் மற்றும் நிலைபெற்ற வேலைவாய்ப்பைக் காட்டுகின்றன.
“பொருளாதார நடவடிக்கைகளுக்கான கண்ணோட்டம் மேம்பட்டுள்ளது, கடந்த கூட்டத்திலிருந்து தெளிவாக மேம்பட்டுள்ளது, மேலும் இது காலப்போக்கில் தொழிலாளர் தேவைக்கும் வேலைவாய்ப்புக்கும் முக்கியமானது,” என்று பவல் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.
இதற்கு நிதிச் சந்தைகள் எந்தவொரு வலுவான எதிர்வினையையும் காட்டவில்லை. பத்திரங்களின் வருவாய் விகிதங்கள் பெரும்பாலும் மாறாமல் இருந்தன; 10 ஆண்டு பத்திரங்களின் வருவாய் விகிதம் சுமார் 4.25% ஆக நிலையாக இருந்தது. கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் ஒரு வலுவான டாலர் கொள்கையை வலியுறுத்தியதைத் தொடர்ந்து, டாலரின் மதிப்பு அன்றைய உச்சநிலையிலிருந்து சற்று சரிந்தது. எஸ்&பி 500 குறியீடும் அன்று பெரிய அளவில் மாற்றமின்றி இருந்தது.
