அமெரிக்க ரிசர்வ் வங்கி தலைவராகும் கெவின் வார்ஷ்
அமெரிக்காவின் ரிசர்வ் வங்கியான ஃபெடரல் ரிசர்வின் தலைவராக உள்ள ஜெரோம் பவலின் பதவிக்காலம் மே மாதம் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த தலைவராக முன்னாள் ஃபெடரல் ரிசர்வ் ஆளுநர் கெவின் வார்ஷை, அமெரிக்க அதிபர் டிரம்ப் தேர்வு செய்துள்ளார்.
“ஃபெடரல் ரிசர்வ் அமைப்பின் ஆளுநர்கள் குழுவின் தலைவராக கெவின் வார்ஷை நான் பரிந்துரைக்கிறேன் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கெவின் தற்போது ஹூவர் நிறுவனத்தில் ஷெப்பர்ட் குடும்பத்தின் சிறப்பு வருகைதரும் பொருளாதாரப் பேராசிரியராகவும், ஸ்டான்போர்ட் பட்டதாரி வணிகப் பள்ளியில் விரிவுரையாளராகவும் பணியாற்றி வருகிறார்,” என்று டிரம்ப் ட்ரூத் சோஷியல் தளத்தில் ஒரு பதிவில் தெரிவித்தார்.
இதன் மூலம் வார்ஷ், தற்போதைய ஃபெடரல் ரிசர்வ் ஆளுநர் கிறிஸ்டோபர் வாலர், பிளாக்ராக்கின் ரிக் ரீடர், மற்றும் டிரம்பின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் கெவின் ஹேசெட் ஆகிய நான்கு போட்டியாளர்களிடையே நிலவிய போட்டியை டிரம்ப் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார்.
அமெரிக்க செனட் சபையால் உறுதி செய்யப்பட்ட பின், வார்ஷ் தலைமைப் பொறுப்பை ஏற்க உள்ள நேரத்தில், டிரம்ப் அரசு, ஃபெடர்ல் ரிசர்வ் வங்கி மீது அழுத்தத்தை கடுமையாக அதிகரித்துள்ளது.
டிரம்பின் இந்த நடவடிக்கைகள், ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்திற்கு ஏற்படும் அபாயங்கள் குறித்த கவலைகளைத் தூண்டியுள்ளன. இது உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்திற்குப் பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
நியூ யார்க்கைச் சேர்ந்த வார்ஷ், சமீபகாலமாக ஃபெடரல் ரிசர்வ் வங்கி மீதான தனது விமர்சனங்களை அதிகரித்துள்ளார். மேலும், டிரம்ப் மற்றும் அவரது அரசின் பல கொள்கை நிலைப்பாடுகளையும் அவர் ஆதரித்துள்ளார்.
முன்னர் அவர் மார்கன் ஸ்டான்லியில் இணைப்பு மற்றும் கையகப்படுத்துதல் வங்கியாளராகப் பணியாற்றினார். டிரம்ப்பின் முதல் பதவிக்காலத்தில், அவர் ஃபெடரல் வங்கியின் தலைவர் பதவிக்கு ஜேனட் யெல்லனுக்குப் பதிலாக வார்ஷைப் பரிசீலித்தார். ஆனால் இறுதியில் பவலைத் தேர்ந்தெடுத்தார்.
பொருளாதாரத்தை மேம்படுத்த வட்டி விகிதங்களைக் குறைக்க வேண்டும் என்று டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், அரசியல் அழுத்தங்களுக்கு மத்தியில் வார்ஷ், ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தை எவ்வாறு பாதுகாக்கப் போகிறார் என்பது குறித்து அனைவரின் கவனமும் குவிந்துள்ளது.
