திடீரென ராஜினாமா செய்த இண்டிகோ CEO பீட்டர் எல்பர்ஸ்
விமான சேவை நிறுவனமான இண்டிகோவின் தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் எல்பர்ஸ், ராஜினாமா செய்ததாக அந்நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு செவ்வாய்க்கிழமை ஒரு கூட்டத்தை நடத்தி எல்பர்ஸின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டது. அவர் உடனடியாக விடுவிக்கப்படுவார் என்று கூறியது.
இண்டிகோ விமான நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராகுல் பாட்டியா நிறுவனத்தின் இடைக்காலப் பொறுப்பை ஏற்றுக்கொள்வார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. டிசம்பர் மாத நிலவரப்படி, பாட்டியாவின் இன்டர் குளோப் எண்டர்பிரைசஸ், இண்டிகோவின் தாய் நிறுவனமான இன்டர் குளோப் ஏவியேஷனில் 35.69 சதவீத பங்குகளைக் கொண்ட மிகப்பெரிய பங்குதாரராகும்.
இண்டிகோவின் தாய் நிறுவனமான இன்டர் குளோப் ஏவியேஷனின் பங்கு நேற்று பிஎஸ்இயில் 3.46 சதவீதம் உயர்ந்து ரூ.4,382.45 ஆக முடிவடைந்தது.
பீட்டர் எல்பர்ஸ், நிர்வாகக் குழுவிற்கு எழுதிய ராஜினாமா கடிதத்தில், தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியில் இருந்து விலகுவதாகவும், தனது முன் அறிவுப்பு காலத்தை தள்ளுபடி செய்யுமாறு நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்ததாகவும் கூறினார்.
டிசம்பரில் இண்டிகோ விமான நிறுவனத்தில் ஏற்பட்ட குளறுபடிகள், ஓட்டுநர் பற்றாகுறையினால், நாடு முழுவதும் பெரிய அளவிலான தாமதங்கள் மற்றும் சுமார் 4,5000 விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், சில மாதங்களுக்குப் பிறகு அவர் ராஜினாமா செய்துள்ளார்.
விமானி சோர்வு குறித்த கடுமையான அரசாங்க விதிகளுக்கு இணங்க, பணியாளர் பட்டியலை சரிசெய்வதில் ஏற்பட்ட தாமதங்கள் காரணமாக விமான நிறுவனம் பின்னர் பயணிகளிடம் மன்னிப்பு கேட்டது. மணிகண்ட்ரோல் அறிக்கையின்படி, இந்த செயல்பாட்டு இடையூறு இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ரூ.2,000 கோடி இழப்பை ஏற்படுத்தியது.
