ஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் பிற தரப்பினரால் போர் நிறுத்தத்திற்கான விவாதங்கள் மற்றும் நிபந்தனைகள் அங்கீகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஈரான் மீது நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த தாக்குதல்களை ரத்து செய்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமை அறிவித்தார். இருப்பினும், கடற்படை முற்றுகை முழு வீச்சில் தொடரும் என்று அவர் கூறினார். அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
“ஈரான் இஸ்லாமியக் குடியரசுடனான பேச்சுவார்த்தைகள் ஈரானியத் தலைமையின் மிக உயர்ந்த மட்டத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கீகரிக்கப்பட்டதன் அடிப்படையில், அமெரிக்காவின் அதிபராக, இன்று மாலை ஈரான் மீது நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த தாக்குதல்கள் மற்றும் குண்டுவீச்சுகளை நான் ரத்து செய்துள்ளேன்,” என்று அவர் ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்கா, இஸ்ரேல், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், துருக்கி, பாகிஸ்தான், பஹ்ரைன், குவைத், ஜோர்டான், எகிப்து மற்றும் பிற நாடுகள் உட்பட இதில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினராலும், “கொள்கை அளவிலும் விரிவான விவரங்கள் அடிப்படையிலும்” பேச்சுவார்த்தைகளும் இறுதி நிபந்தனைகளும் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அவர் அறிவித்தார்.
“இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் வரை” அமெரிக்க ராணுவத்தின் கடற்படை முற்றுகை முழு வீச்சில் அமலில் இருக்கும் என்றும் ட்ரம்ப் மேலும் கூறினார்.
இருப்பினும், ஈரான் மற்றும் பிற கூட்டாளிகளிடமிருந்து இது குறித்த உறுதிப்படுத்தல் இன்னும் எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவுடனான எந்தவொரு ஒப்பந்தத்திற்கான வரைவு உரையையும் தெஹ்ரான் இன்னும் அங்கீகரிக்கவில்லை என்று ஈரானின் ஃபார்ஸ் செய்தி நிறுவனம் வியாழக்கிழமையன்று பெயர் குறிப்பிடாத ஒரு வட்டாரத்தை மேற்கோள் காட்டித் தெரிவித்தது.
“அமெரிக்காவுடனான ஆரம்பக்கட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கான எந்தவொரு திட்டத்தையும் ஈரான் அங்கீகரிக்கவில்லை” என்று ஈரானின் பேச்சுவார்த்தைக் குழுவிற்கு நெருக்கமான ஒரு தகவல் அறிந்த வட்டாரத்தை மேற்கோள் காட்டி ‘ஃபார்ஸ்’ செய்தி நிறுவனம் கூறியது.
அமெரிக்கா இன்று இரவு ஈரான் மீது “மிகக் கடுமையான தாக்குதலை” நடத்தும் என்று ட்ரம்ப் மிரட்டல் விடுத்த சில மணிநேரங்களிலேயே இந்த அமைதி ஒப்பந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், “எதிர்காலத்தில் வெகு விரைவில்” முக்கியமான ‘கர்க் தீவு’ (Kharg Island) உட்பட ஈரானின் எண்ணெய் மற்றும் எரிவாயுத் தொழில்கள் அனைத்தின் மீதும் அமெரிக்கா “முழுமையான கட்டுப்பாட்டை” மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.
