இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மீது 10% இறக்குமதி வரி விதித்த அமெரிக்கா
கட்டாய உழைப்பு மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்களின் இறக்குமதிக்குத் தடை விதிக்கத் தவறியதாகக் கூறி, இந்தியா மற்றும் 16 நாடுகளிலிருந்து வாங்கப்படும் பொருட்கள் மீது அமெரிக்கா 10% வரி விதித்துள்ளது. அதன் வர்த்தகச் சட்டத்தின் பிரிவு 301-ன் கீழ் நடத்தப்பட்ட விசாரணையில் ஜூன் மாதம் முன்மொழியப்பட்ட 12.5% வரியை விட இந்த வரி விகிதம் குறைவானதாகும்.
பாகிஸ்தான், வங்கதேசம், கம்போடியா, இலங்கை மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் மீதும் 10% வரி விதிக்கப்பட்டுள்ளது.
“கட்டாய உழைப்பு மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்களின் இறக்குமதிக்குத் தடை விதிப்பது உள்ளிட்ட இந்தியா மீதான விசாரணையின் முடிவுகள், பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் சாட்சியங்கள், பிரிவு 301 குழு மற்றும் ஆலோசனைக் குழுக்களின் பரிந்துரைகள் மற்றும் அதிபரின் குறிப்பிட்ட உத்தரவு ஆகியவற்றின் அடிப்படையில், சில விதிவிலக்குகளைத் தவிர இந்தியாவின் தயாரிப்புகள் மீது 10% வரி விதிக்க அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி முடிவு செய்துள்ளார்” என்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட இறுதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டாய உழைப்பைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட பொருட்களின் இறக்குமதியைத் தடை செய்யும் வகையில் இந்தியா அதன் வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையை ஜூன் 14 அன்று திருத்தியது. குறிப்பிட்ட சில பொருட்களின் உற்பத்தித் திறன் தேவைக்கு அதிகமாக இருப்பது குறித்த மற்றொரு விசாரணையையும் வாஷிங்டன், மார்ச் மாதத்தில் தொடங்கியிருந்தது. அதிக உற்பத்தித் திறன் குறித்த வரைவு அறிக்கையை அமெரிக்கா இன்னும் வெளியிடவில்லை.
கட்டாய உழைப்பு மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்களின் இறக்குமதித் தடையை ஏற்றுக்கொண்டு அதைச் திறம்பட அமல்படுத்த உறுதியளித்துள்ள வர்த்தகப் பங்காளிகள் மீது 10% வரியும், அத்தகைய தடையை ஏற்கத் தவறிய வர்த்தகப் பங்காளிகள் மீது 12.5% வரியும் விதிக்கப்படும் என்று அது கூறியது.
அவசரநிலையைப் பயன்படுத்தி கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட “பரஸ்பர வரிகள்” சட்டவிரோதமானவை என்று பிப்ரவரி மாதம் அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து இந்த இரண்டு விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டன; அதற்குப் பதிலடியாக அமெரிக்க நிர்வாகம் ஜூலை 24 வரை அனைத்து நாடுகள் மீதும் 10% வரி விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
