A2B நிறுவனத்தை 18 கோடி டாலருக்கு வாங்கும் போதி ட்ரீ
தென்னிந்தியாவின் முன்னணி உணவு நிறுவனங்களில் ஒன்றான அடையார் ஆனந்த பவன் (A2B)-இல், ஜேம்ஸ் முர்டாக் மற்றும் உதய சங்கர் தலைமையிலான போதி ட்ரீ சிஸ்டம்ஸ் நிறுவனம், 18 கோடி டாலர் முதலீடு செய்து பெரும்பான்மை பங்குகளைக் கையகப்படுத்த உள்ளது.
உலகளாவிய அளவில் இந்திய பாரம்பரிய உணவு வணிகத்தை உருவாக்கும் நோக்கில், A2B மற்றும் போதி ட்ரீ சிஸ்டம்ஸ் ஆகிய நிறுவனங்கள் நவம்பர் 12, அன்று ஒரு கூட்டணியை அறிவித்தன. இந்த முதலீடு, A2B-இன் உணவகச் செயல்பாடுகளை விரிவுபடுத்தவும், தென்னிந்திய இனிப்புகள் மற்றும் கார வகைகளை உள்ளடக்கிய அதன் பேக்கேஜ்டு உணவு வணிகத்தை மேம்படுத்தவும் உதவும்.
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட இந்நிறுவனம், தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் வலுவான இடத்தைப் பெற்றுள்ளதுடன், இந்தியா முழுவதும் அதன் செயல்பாடுகளை விரிவுபடுத்தி வருகிறது. இந்நிறுவனம் உள்நாட்டில் 160 கிளைகளையும், சர்வதேச அளவில் 30-க்கும் மேற்பட்ட கிளைகளையும் கொண்டு இயங்குகிறது; இதில் 15,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.
போதி ட்ரீ சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர்களான ஜேம்ஸ் முர்டாக் மற்றும் உதய சங்கர் ஆகியோர், இந்த கூட்டாணியானது தொழில்முறை ரீதியாக நிர்வகிக்கப்படும் ஒரு இந்திய உணவு நிறுவனத்தை உருவாக்க உதவும் என்று தெரிவித்தனர். “A2B தனது சீரான மற்றும் நம்பகமான தரத்தின் மூலம் லட்சக்கணக்கான குடும்பங்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது” என்று அவர்கள் கூட்டறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், சிங்கப்பூர், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மலேசியா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் A2B மேற்கொண்டுள்ள சர்வதேச செயல்பாடுகள் தங்களைக் கவர்ந்ததாகவும், அதன் உணவுகளை உலகெங்கிலும் உள்ள இன்னும் அதிகமான மக்களிடம் கொண்டு சேர்க்க ஆவலாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். A2B நிறுவனத்தின் புதிய இயக்குநர்கள் குழுவின் தலைவராக உதய சங்கர் பொறுப்பேற்பார்.
A2B நிறுவனம், கே.டி. சீனிவாச ராஜா மற்றும் கே.டி. வெங்கடேசன் ஆகிய சகோதரர்களால் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இனிப்புக் கடையாகத் தொடங்கப்பட்டது. இந்தக் கூட்டணியானது, A2B நிறுவனத்தை பொதுச் சந்தையில் பட்டியலிடுவதற்குத் தயார்படுத்த உதவும் என்றும், இதன் மூலம் வாடிக்கையாளர்கள், பணியாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சியில் பங்கேற்க முடியும் என்றும் சீனிவாச ராஜா தெரிவித்தார்.
