5% ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் ஓலா எலக்ட்ரிக்
செயல்பாடுகளை நெறிப்படுத்தவும், சேவைத் திறனை அதிகரிக்கவும் வடிவமைக்கப்பட்ட ஒரு பரந்த மறுசீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, தனது ஊழியர்களில் சுமார் 5 சதவீதம் பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக ஓலா எலக்ட்ரிக் லிமிடெட் தெரிவித்துள்ளது.
பவிஷ் அகர்வால் தலைமையிலான இந்த மின்சார இரு சக்கர வாகன நிறுவனம், சேவை வழங்கலை மேம்படுத்துவதிலும், அதன் வாடிக்கையாளர் சேவைப் பிரிவில் ஆட்டோமேசனை அதிகரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிறுவனத்தில் சுமார் 3,500 ஊழியர்கள் உள்ளனர். மேலும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் 175 ஊழியர்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹைப்பர் சர்வீஸ் மற்றும் சேவை சார்ந்த செயல்பாட்டு மறுசீரமைப்பு மூலம் கிடைத்த ஆரம்பகால வெற்றிகளின் அடிப்படையில், தனது வணிக மீட்சியில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாக ஓலா எலக்ட்ரிக் தெரிவித்துள்ளது. இதன் மூலம், நாடு முழுவதும் உள்ள 80 சதவீதத்திற்கும் அதிகமான சேவை கோரிக்கைகளுக்கு, அதே நாளில் தீர்வு காணப்படுகிறது.
“நிறுவனம் தனது வாடிக்கையாளர் சேவைப் பிரிவில் ஆட்டோமேசனை அதிகரிப்பதன் மூலம் வேகம் மற்றும் ஒழுக்கத்தை இரட்டிப்பாக்குகிறது. இந்தத் தொடர்ச்சியான, கட்டமைப்பு ரீதியான சீரமைப்பின் ஒரு பகுதியாக, பணியாளர்களில் தோராயமாக 5 சதவீதம் பேர் பாதிக்கப்படுவார்கள்” என்று இந்நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சேவை மற்றும் வாகனத் தரம் குறித்த வாடிக்கையாளர் புகார்கள் அதிகரித்து வரும் நிலையில், வஹான் தரவுகளை மேற்கோள் காட்டி வெளியான அறிக்கைகளின் படி, இந்தியாவின் மின்சார இருசக்கர வாகன சந்தையில் ஓலா எலக்ட்ரிக்கின் பங்கு, ஒரு வருடத்திற்கு முன்பு இருந்த சுமார் 26 சதவீதத்திலிருந்து ஜனவரியில் சுமார் 6 சதவீதமாகக் குறைந்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த மாதத்தில் நிறுவனம் 6,747 வாகனங்களை விற்பனை செய்தது.
கடந்த ஆண்டில், தலைமை நிதி அதிகாரி ஹரிஷ் அபிசந்தானி உட்பட பல உயர் மட்ட அதிகாரிகள் வெளியேறியுள்ளனர். அவருக்குப் பதிலாக தீபக் ரஸ்தோகி நியமிக்கப்பட்டார். மேலும், தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி அன்ஷுல் கண்டேல்வால் மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரி சுவோனில் சாட்டர்ஜி ஆகியோரும் வெளியேறியுள்ளனர்.
