டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன் ஓய்வு பெறுகிறார் ?
டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன், மூன்றாவது முறையாக இந்த நிறுவனத்தை வழிநடத்த முன் வரமாட்டார் எனத் தெரிகிறது. இருப்பினும், அவர் குழுமத்தின் எதிர்கால வளர்ச்சிப் பாதைக்கான விரிவான திட்டத்தை வகுப்பார் என்றும், குழுமத்தில் நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்கள் லாபம் ஈட்டத் தொடங்குவதற்கான காலக்கெடுவை நிர்ணயிப்பார் என்றும் வட்டாரங்கள் தெரிவித்தன.
டாடா டிரஸ்ட்களின் அறங்காவலர்களிடையே பல்வேறு விதமான முரண்பாடுகல், மோதல்கள் இருப்பதாலும், பல்வேறு பிரிவுகளுக்குள் ஏற்படும் அதிகார மாற்றங்களுக்கு மத்தியில் ஒரே நிலையான சக்தியாகக் கருதப்பட்ட சந்திரசேகரனுக்கு நிலைமை சங்கடமாகியுள்ளது என்று உள்வட்டாரங்கள் தெரிவித்தன.
அவர் இன்னும் மதிக்கப்பட்டாலும், அவரது மேற்பார்வையின் கீழ் குழுமத்தின் செயல்பாடு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருப்பது, அவர் தொடர்ந்து நீடிப்பார் என்பதில் ஒரு நிழலைப் படரச் செய்கிறது என்று அவர்கள் கூறினர். அவரது பதவிக்காலத்தில் குழுமத்தின் ஒட்டுமொத்த வலுவான செயல்பாடு, ஏர் இந்தியா, டாடா டிஜிட்டல், டாடா ப்ராஜெக்ட்ஸ் மற்றும் டாடா எலக்ட்ரானிக்ஸ் போன்ற நிறுவனங்களில் ஏற்பட்ட நஷ்டங்களால் மங்கிப் போயுள்ளது.
ஜூன் மாதம் நடைபெறவுள்ள டாடா அறக்கட்டளைகளின் அடுத்த கூட்டம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். ஏனெனில், அறங்காவலர்கள் குழுமத்தின் செயல்திறன் குறித்த செயல்திட்டம், புதிய வணிகங்களில் செலவிடப்படும் வளங்கள் மற்றும் அவற்றின் வருமானம் ஆகியவற்றை மறுஆய்வு செய்யவும், பல புதிய முயற்சிகளில் ஏற்படும் நஷ்டங்களைக் குறைத்து அவற்றை லாபகரமாக்குவதற்கான திட்டங்களை வகுக்கவும் உள்ளனர். 2022-ல் டாடா குழுமத்திற்குத் திரும்பிய பின், வளர்ச்சி அடையப் போராடி வருவம் ஏர் இந்தியாவும் இதில் அடங்கும்.
அடுத்த ஆண்டில் நடைபெற வேண்டிய சந்திரசேகரின் மறுநியமனமும் இந்த விவாதங்களின் ஒரு பகுதியாக இருக்கும். மேலும் அது நிபந்தனைக்குட்பட்டதாக இருக்கலாம் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
டாடா சன்ஸில் மூன்றில் இரண்டு பங்கு பங்குகளை வைத்திருக்கும் டாடா அறக்கட்டளைகளுக்கு, இந்த ஹோல்டிங் நிறுவனத்தை நடத்துவதில் கணிசமான செல்வாக்கு உள்ளது. மேலும், டாடா அறக்கட்டளைகளின் தலைவர் நோயல் டாடா தனது செல்வாக்கை அதிகரித்து வருகிறார்.
பிப்ரவரியில், சந்திரசேகரனை மூன்றாவது முறையாக மீண்டும் நியமிப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்படவிருந்த அறங்காவலர்கள் கூட்டத்தில், நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்கள், வள ஒதுக்கீடு மற்றும் அவற்றை மீட்டெடுப்பதற்கான தெளிவான காலக்கெடு குறித்த கேள்விகளை நோயல் டாடா எழுப்பியதால், அந்த முடிவு ஒத்திவைக்கப்பட்டது.
