Teslaவின் பலே திட்டம்..
லம்போர்கினி இந்தியாவை முன்னர் வழிநடத்திய ஷரத் அகர்வால், முன்னணி மின்சார கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா நிறுவனத்தின் இந்திய பிரிவுக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மிக அதிக மக்கள் தொகை கொண்ட இந்திய சந்தையில், டெஸ்லா கார் விற்பனை மந்தமாக உள்ள நிலையில, அதன் வளர்ச்சியை மீட்டெடுக்கும் பணி அவருக்கு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
தென்கிழக்கு ஆசியாவிற்கான டெஸ்லாவின் இயக்குநரான இசபெல் ஃபேன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மும்பை மற்றும் புது தில்லியில் டெஸ்லாவின் இரண்டு இந்திய விற்பனையகங்களை தொடங்கி வைத்தார். மே மாதம் ராஜினாமா செய்த முன்னாள் இந்தியப் பிரிவு தலைவர் பிரசாந்த் மேனன், இந்தியா மற்றும் அமெரிக்காவில் இருந்து பணிபுரிந்து வந்தார்.
உயர் ரக வாகன விற்பனையில் நீண்ட கால அனுபவம் கொண்ட ஒரு தலைவரை அழைத்து வருவதன் மூலம், அதிக அளவில் விற்பனையாகும் சாதாரண ரக கார்களில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக ஆடம்பர கார்கள் விற்பனையை ஊக்கப்படுத்த திட்டமிட்டுள்ளது. இப்போதைக்கு, இந்தியாவில் கார்கள் இறக்குமதி மீதான சுங்க வரிகள் மற்றும் மின்சார கார்களை ஏற்பதில் வாடிக்கையாளர்களுக்கு உள்ள தயக்கங்கள் ஆகியவற்றை எதிர் கொண்டு, விற்பனை அளவை அதிகரிக்கச் செய்யும் சவாலை அகர்வால் எதிர்கொண்டுள்ளார்.
இந்தியாவில் டெஸ்லா கார்கள் விற்பனை அதன் எதிர்பார்ப்புகளை விட குறைவாகவே உள்ளது. ஜூலை நடுப்பகுதியில் அதன் விற்பனையைத் தொடங்கியதிலிருந்து, டெஸ்லா நிறுவனம் 600க்கும் மேற்பட்ட ஆர்டர்களைப் பெற்றுள்ளதாக ப்ளூம்பெர்க் நியூஸ் செப்டம்பரில் செய்தி வெளியிட்டது. இது உலகளவில் டெஸ்லா நிறுவனம் ஒவ்வொரு நான்கு மணி நேரத்திற்கும் செய்யும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு சமம். இந்த ஆர்டர் எண்ணிக்கை அக்டோபர் மாதத்திற்குள் 800க்கும் மேற்பட்ட வாகனங்களாக உயர்ந்துள்ளது கூறப்படுகிறது.
இந்தியாவில் மின்சார கார்களின் சராசரி விற்பனை விலை ரூ.22 லட்சமாக உள்ள நிலையில், அதீத இறக்குமதி வரிகளினால் இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்படும் டெஸ்லா கார்களின் சராசரி விலை ரூ.60 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளதே இந்த விற்பனை மந்தத்திற்கு காரணமாகும்.
