பண்டிகைக் காலத்தில் சாதனை அளவிலான விற்பனையை எதிர்பார்க்கும் டைட்டன்
தன்தேரஸ் பண்டிகையை முன்னிட்டு, தங்கத்தின் விலை குறைந்துள்ளதாலும், பழைய தங்கத்தை கொடுத்து புதிய நகைகளை வாங்கும் நுகர்வோர் போக்கு அதிகரித்துள்ளதாலும், டைட்டன் நிறுவனம் சாதனை அளவிலான விற்பனையை எதிர்பார்க்கிறது. டைட்டன் நிறுவனத்தின் நகைப்பிரிவு தலைமை நிர்வாக அதிகாரி அருண் நாராயண் கூறுகையில், தற்போது அந்நிறுவனத்தின் கடைகளில் நடைபெறும் பரிவர்த்தனைகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை, பழைய தங்கத்தைப் பரிமாற்றம் செய்யும் முறை மூலமே நடைபெறுகின்றன என்று தெரிவித்தார்.
பண்டிகைக் காலம் நம்பிக்கையூட்டும் வகையில் தொடங்கியிருந்தாலும், தங்க விலையில் நிலவிய ஏற்ற இறக்கங்கள் காரணமாக, சில வாடிக்கையாளர்கள் தற்காலிகமாக வாங்குவதைத் தள்ளிவைத்தனர். கடந்த வார இறுதியில் தங்கத்தின் விலை குறைந்து, கடந்த ஏழு முதல் எட்டு மாதங்களில் இல்லாத அளவிற்கு சரிந்ததால், ஏராளமான வாடிக்கையாளர்கள் மீண்டும் கடைகளுக்கு வரத் தொடங்கியுள்ளனர்.
“அடுத்த ஏழு நாட்களும் இதே நிலை நீடிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். எனவே, தன்தேரஸ் பண்டிகை வரையிலான இந்த காலகட்டத்தில், விற்பனை இதுவரை இல்லாத அளவிற்கு உச்சத்தை எட்டும் என்று நம்புகிறோம்” என்று அருண் நாராயண் கூறினார்.
நவம்பர் மாதத்தின் முதல் 11 நாட்கள், அதாவது பாய் தூஜ்பண்டிகை வரை தேவை வலுவாக இருக்கும் என்று டைட்டன் எதிர்பார்க்கிறது. பண்டிகைக் காலத் தேவையைப் பூர்த்தி செய்ய, இந்நிறுவனம் அத்யந்தரா என்ற புதிய நகை சேகரிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், 18 காரட் தங்க நகைகள் மற்றும் வைரங்கள் பதிக்கப்பட்ட நகைகளின் வகைகளையும் விரிவுபடுத்தியுள்ளது. வரவிருக்கும் திருமண சீசனை முன்னிட்டு, வாடிக்கையாளர்கள் எளிதாக நகைகளை வாங்கும் வகையில் இந்த 18 காரட் நகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த பண்டிகைக் காலத்தில் விற்பனை அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, நுகர்வோர் தங்கள் வசம் உள்ள பழைய தங்கத்தை கொடுத்து, புதிய நகைகளை வாங்குவதில் காட்டும் ஆர்வம் ஆகும்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், சச்சின் டெண்டுல்கர் பங்கேற்ற விளம்பரப் பிரச்சாரத்தின் மூலம், பயன்படுத்தப்படாத நகைகள், தங்க நாணயங்கள் மற்றும் கட்டிகளை கொடுத்து புதிய வடிவமைப்புகளைப் பெற்றுக்கொள்ளும் முறையை டைட்டன் தீவிரமாக ஊக்குவித்தது. இந்த அணுகுமுறை, தங்கள் நகைகளை மாற்ற விரும்பும் நுகர்வோருக்குப் பயனுள்ளதாக இருப்பதுடன், புதிய தங்க இறக்குமதியின் தேவையையும் குறைக்கிறது.
