செந்நிறத்தில் மாறிய அதானி பங்குகள்..
அதானி குழுமத்துக்கு சொந்தமான 10 நிறுவனங்களின் பங்குகளும் செந்நிறத்தில் வர்த்தகமாயின. சில நிறுவனங்களுக்கு அதானி குழுமம் லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகார் குறித்து அமெரிக்க அரசு விசாரணையை தொடங்கியிருப்பதால் பங்குச்சந்தையில் அதானி குழுமத்துக்கு இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது. வர்த்தக நேரத்தின் தொடக்கத்தில் அதானி குழுமத்தின் பங்குகள் 4 விழுக்காடு வரை சரிவை கண்டுள்ளன. குறிப்பாக அதானி துறைமுகம் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் உள்ளிட்ட நிறுவன பங்குகள் சுமார் 3 விழுக்காடு வரை சரிந்தன. அதானி வில்மர், அதானி பவர் உள்ளிட்ட நிறுவனங்களும், அதானி டோட்டல் கேஸ், அதானி எனர்ஜி, அதானி கிரீன் எனர்ஜி, அதானி எனர்ஜி சொல்யூசன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் கணிசமாக சரிந்தன. இந்தியாவில் ஆற்றல் துறை நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்க லஞ்சம் கைமாறியதாக புகார்கள் கடந்த 15 ஆம் தேதி தொடங்கின, அதனை அப்போதே அமெரிக்க அரசு விசாரிக்கத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக தங்களுக்கு எதுவும் தெரியாது என்று அதானி குழுமம் விளக்கம் அளித்துள்ளது.
அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க் அண்மையில் அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டை முன்வைத்ததால் அதானி குழுமத்தின் மதிப்பு பல மடங்கு சரிந்திருந்தது. ஆனால் எந்த புகாரையும் அதானி குழுமம் ஏற்காமல் மறுத்து வந்தது.