சம்பளம் : 1லட்சம் கோடி டாலர் ???
டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க்கிற்கு அடுத்த 10 ஆண்டுகளில் மொத்த ஒரு லட்சம் கோடி டாலர் அளவிலான சம்பளத் தொகுப்பு வழங்க டெஸ்லா பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
ஸ்டாக் ஆப்சன்கள் இதில் பெரும் பகுதியாக இருக்கும். வரலாற்றில் மிகப் பெரிய கார்ப்பரேட் ஊதிய தொகுப்பு இது தான் என்று கருதப்படுகிறது. வரிகள் மற்றும் இதர பிடித்தங்களுக்கு பிறகு இந்த தொகுப்பூதியத்தின் நிகர மதிப்பு சுமார் $87,800 கோடியாக உள்ளது.
இந்த தொகுப்பூதியத்தை முழுமையாக ஈட்ட, எலான் மஸ்க் சில முக்கிய நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் : அடுத்த 10 ஆண்டுகளில் 2 வாகனங்களை விற்பனை செய்தல், 10 லட்சம் ரோபோ டாக்சிகளை இயக்குதல், 10 லட்சம் ரோபோக்களை விற்பனை செய்தல் மற்றும் $40,000 கோடி லாபத்தை ஈட்டுதல் ஆகிய மைல்கல்களை எட்ட வேண்டும். கூடுதலாக, டெஸ்லாவின் மொத்த சந்தை மதிப்பை $1.5 லட்சம் கோடியில் இருந்து $8.5 லட்சம் கோடியாக உயர்த்த வேண்டும். ஒவ்வொரு மைல் கல்லை அடைவதற்கும், பங்குகளில் 1 சதவீதம் அளிக்கப்படும். அதாவது பகுதி வெற்றி கூட பல்லாயிரக்கணக்கான கோடி டாலர் வருவாயை அவருக்கு அளிக்கும்.
டெக்சாஸின் ஆஸ்டினில் நடந்த டெஸ்லாவின் வருடாந்திர கூட்டத்தில், 75 சதவீதத்திற்கும் அதிகமான பங்குதாரர்களால் இந்த திட்டம் அங்கீகரிக்கப்பட்டது. ரோபோ டாக்ஸி நெட்வொர்க்குகள் மற்றும் மனித ரோபோக்கள் போன்ற முன்முயற்சிகளுடன், டெஸ்லாவை AI மற்றும் ரோபாட்டிக்ஸ் துறைகளில் உலகின் முன்னணி நிறுவனமாக மாற்றும் மஸ்க்கின் தொலைநோக்குப் பார்வையை முதலீட்டாளர்கள் பெருமளவில் ஆதரித்தனர்.
மஸ்க்கின் AI ஸ்டார்ட்அப் நிறுவனமான xAI இல், டெஸ்லாவின் முதலீட்டையும் வாக்கெடுப்பு மூலம் டெஸ்லா பங்குதாரர்கள் அங்கீகரித்தனர். ஓட்டுனர் இல்லா வாகன திட்டங்களுக்கு இந்நிறுவனம் டெஸ்லாவின் முக்கிய கூட்டாளியாக கருதப்படுகிறது.
இந்த ஊதியத் தொகுப்பு டெஸ்லாவில் அவரது வாக்களிப்பு பங்கை அதிகரிக்கும் என்று மஸ்க் கூறியுள்ளார். சம்பளமாக ஈட்டுவதை விட தான் இதை அதிகம் மதிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
அதே சமயத்தில் நார்வேயின் இறையாண்மை செல்வ நிதி மற்றும் ப்ராக்ஸி நிறுவனங்களான கிளாஸ் லூயிஸ் மற்றும் நிறுவன பங்குதாரர் சேவைகள் உட்பட சில முக்கிய முதலீட்டாளர்கள் இந்த ஊதியத் தொகுப்பை எதிர்த்தனர். இத்தகைய அதீத ஊதியத் தொகுப்பு, பங்குதாரர்களின் செல்வ மதிப்பைக் குறைத்து, மஸ்க்கின் கைகளில் அதிக அதிகாரத்தைக் குவிக்கும் என்று கவலை தெரிவித்தனர்.
மஸ்க்கின் தொகுப்பு ஊதியத்தை, டெஸ்லாவின் செயல்பாடு மற்றும் பங்கு மதிப்பு உயர்வு ஆகிய மைல்கற்களுடன் இணைப்பதன் மூலம் இந்த திட்டம் இறுதியில் பங்குதாரர்களுக்கு பயனளிக்கும் என்று டெஸ்லாவின் நிர்வாகக் குழு வாதிட்டது.
