இந்தியாவுக்கு அடுத்த சிக்கல்???
உலகளாவிய வர்த்தகப் போரில் ஒரு புதிய முனையைத் திறக்கும் விதமாக, மெக்சிகோவின் செனட் சபை, இந்தியா, சீனா மற்றும் பல ஆசிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 50% வரை உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளது. இந்த உயர்த்தப்பட்ட வரிகள் அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும். இந்த நடவடிக்கை அந்த நாட்டின் வர்த்தகக் கொள்கையில் ஒரு பெரிய மாற்றத்தைக் குறிக்கிறது.
உள்நாட்டு வணிகக் குழுக்களின் எதிர்ப்பு மற்றும் சம்பந்தப்பட்ட ஆசிய நாடுகளின் ஆட்சேபனைகளை மீறி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது, அமெரிக்கா-மெக்சிகோ-கனடா ஒப்பந்தம் (USMCA) குறித்த ஒரு முக்கிய மறு ஆய்வுக்கு முன்னதாக, உள்ளூர் உற்பத்தியாளர்களைப் பாதுகாக்க மெக்சிகோ சமீபத்திய ஆண்டுகளில் எடுத்துள்ள மிகவும் உறுதியான நடவடிக்கை என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக கீழ் அவையால் அங்கீகரிக்கப்பட்ட இந்த நடவடிக்கை, மெக்சிகோவுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் இல்லாத நாடுகளில் இருந்து வரும் பொருட்களுக்கு புதிய அல்லது அதிக இறக்குமதி வரிகளை விதிக்கிறது. இதில் சீனா, இந்தியா, தென் கொரியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகியவை அடங்கும்.
புதிய விதியின் கீழ், 2026 முதல், ஆட்டோமொபைல்கள், வாகன உதிரிபாகங்கள், ஜவுளி, ஆடைகள், பிளாஸ்டிக் மற்றும் எஃகு போன்ற சில குறிப்பிட்ட பொருட்களுக்கு 50% வரை இறக்குமதி வரி விதிக்கப்படும். பெரும்பாலான இதர பொருட்களுக்கு 35% ஆக உச்சவரம்பு நிர்ணயிக்கப்படும்.
சீன அதிகாரிகள் மற்றும் உள்நாட்டு வர்த்தக சபைகள் இந்தக் கொள்கை மாற்றத்தை விமர்சித்த போதிலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதை நிறைவேற்றினர். இந்த நடவடிக்கை இரண்டு நோக்கங்களுக்கு உதவுகிறது என்று ஆய்வாளர்களும் தனியார் துறையினரும் கூறுகின்றனர்: USMCA மறுஆய்வுக்கு முன்னதாக அமெரிக்காவுடன் ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவது மற்றும் வரி வருவாயை அதிகரிப்பது.
மெக்சிகோ தனது நிதிப் பற்றாக்குறையைக் குறைக்க முயற்சிக்கும் வேளையில், இந்த வரி உயர்வினால் அடுத்த ஆண்டு 376 கோடி டாலர் வருவாயை ஈட்ட உதவும் என்று எதிர்பார்க்கிறது. இந்த நடவடிக்கை பசிபிக் பெருங்கடலின் இருபுறமும் உள்ள நாடுகளுடனான மெக்சிகோவின் உறவுகளைச் சோதிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
