மருத்துவ காப்பீட்டுக்கு 12%ஜிஎஸ்டியா?
இந்தியாவில் ஜிஎஸ்டி வரி வசூல் முறை அமலில் உள்ள நிலையில், மருத்துவ காப்பீடுகளுக்கு 12%வரி வசூலித்தால் நன்றாக இருக்கும் என்று ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவத்தின் நிர்வாக இயக்குநர் ஆனந்த் ராய் விருப்பம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தற்போது வரை ஜிஎஸ்டி வரி வசூலில் மருத்துவ காப்பீட்டுக்கு 18% வரி வசூலிக்கப்படுகிறது. வரும் 9 ஆம் தேதி ஒரு முக்கிய ஃபிட்மென்ட் கமிட்டி கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களின் அதிகாரிகள் பங்கேற்க இருக்கின்றனர். ஜிஎஸ்டி கவுன்சில்கூட்டத்தில் காப்பீடுகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து ஆலோசனையும் நடைபெற இருக்கிறது. இந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அனைத்து மாநில நிதியமைச்சர்கள் பங்கேற்க இருக்கின்றனர். இந்நிலையில் வங்கிகளில் காப்பீடுகளை பெறுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. வேகமான வளர்ச்சியையும் இந்த துறை பெற்று வருகிறது. மருத்துவ காப்பீடுகள் செய்யும் நிறுவனங்கள் பெரிய வங்கிகளுடன் கைகோர்த்து தங்கள் தயாரிப்புகளை மக்களிடம் வங்கி வாயிலாகவே விற்றுவிடுகின்றனர். இந்த சூழலில் ஆனந்த் ராயின் பேச்சு வணிக உலகில் முக்கியமாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஜிஎஸ்டி வரியில், மருத்துவ காப்பீடுகளுக்கு 18 % வரி வசூலிக்க மத்திய அமைச்சர் நிதின் கட்கரியே எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், மருத்துவ காப்பீட்டு நிறுவன அதிகாரியும் அதை குறைக்க வேண்டும் என கூறியிருப்பது கவனம் ஈர்த்திருக்கிறது.