கீழே விழுந்த 26 நிறுவன ஐபிஓகள்..

ஈக்விட்டி பங்குச்சந்தைகளில் பெரிய சரிவு காணப்பட்டு வரும் நிலையில், ஓலா எலெக்ட்ரிக், என்டிபிசி உள்ளிட்ட 26 நிறுவனங்கள் அண்மையில் ஐபிஓ எனப்படும் ஆரம்ப பங்குகளை வெளியிட்டனர். அவை அனைத்தும் இறங்கு முகத்தில் உள்ளன. 26-ல் 21 நிறுவனங்களின் ஆரம்ப பங்கு வெளியீடுகள், பங்கு வெளியீட்டின்போது இருந்த மதிப்பை விட கணிசமாக குறைந்துள்ளன. சனாதன் டெக்ஸ்டைல்ஸ், ஸ்டாலியன்இந்தியா உள்ளிட்ட நிறுவனங்கள் சுமார் 62 விழுக்காடு வரை விலை குறைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 2025 தொடங்கியது முதல் தற்போது வரை மும்பை பங்குச்சந்தையில் ஐபிஓ குறியீடுகள் 20 விழுக்காடு வரை சரிவை கண்டுள்ளன. ஹியூண்டாய் மோட்டார் இந்தியா, லக்ஷ்மி டென்டல் உள்ளிட்ட ஐபிஓ நிறுவனங்கள் 5 முதல் 11 விழுக்காடு வரை இன்ட்ரா டே பிரிவில் விலை குறைந்துள்ளன. எதிர்பார்த்ததைவிட அதிகவேகமான பொருளாதார மந்தநிலை, பருவமழை குறைந்தது உள்ளிட்ட காரணங்களால் உள்நாட்டு சில்லறை வர்த்தக முதலீட்டாளர்கள் ஆர்வம் குறைந்துள்ளது. 2024-25 நிதியாண்டில் மட்டும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 3.88 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு பங்குகளை விற்றுள்ளனர். அதே நேரம் உள்நாட்டு முதலீட்டாளர்கள் 5.56 டிரில்லியன் அளவுக்கு பங்குகளை வாங்கிக் குவித்தனர். தொடர் ஏற்றங்கள் இருந்தால் மட்டுமே இந்திய பங்குச்சந்தைகள் சரிவில் இருந்து மீள முடியும் நிலை ஏற்பட்டுள்ளது. என்டிபிசி நிறுவனத்தின் பங்குகள் இதுவரை இல்லாத வகையில் 5 விழுக்காடு சரிந்து 93.40ரூபாயாக விலை குறைந்துள்ளது. 3 வேளை நாட்களில் மட்டும் அந்நிறுவனம் 12 விழுக்காடு வரை சரிந்துள்ளது. ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் பங்கு மதிப்பு வெளியிடும்போது 76 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது அது 57 ரூபாய் 06 பைசாவாக குறைந்துள்ளது. கடந்த ஆகஸ்ட்டில் ஒரு பங்கின் விலை உச்சமாக 157 ரூபாயாக இருந்த ஓலா நிறுவன பங்குகள் தற்போது 64 விழுக்காடு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.