5 ஆண்டுகளில் 81.30% கடன் திரும்ப வரல..
கடந்த 5 ஆண்டுகளில் வங்கிகள் பல்வேறு தரப்பினருக்கு அளித்த வங்கிக்கடன்களில் 81.30 விழுக்காடு அளவுக்கு திரும்ப வரவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அரசு அதிகாரபூர்வமாக பதில் அளித்துள்ளது. அதில், 1லட்சத்து 85 ஆயிரத்து 241 கோடி ரூபாய் பணம்,பல்வேறு தரப்பினருக்கு கடனாக வழங்கப்பட்டுள்ளது என்றும், 18 விழுக்காடு அளவுக்கு உள்ள கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளதும் தெரியவந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 9.90லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வங்கிகள் கடன்களை தள்ளுபடி செய்துள்ளன. இதனை ரிசர்வ் வங்கியே அதிகாரபூர்வமான தகவலாக வெளியிட்டுள்ளது. தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களின் அளவு இந்தியாவின் நிதி பற்றாக்குறையில் 59 விழுக்காடு ஆகும். 2023-24 நிதியாண்டில் இந்தியாவின் பண பற்றாக்குறை 16.54லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. கடந்த மார்ச் மாத தரவுகளின்படி வராக்கடன்களின் எண்ணிக்கை கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2.8 %ஆக இருந்ததாக அந்த புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. கடன்களை தள்ளுபடி செய்ததில் பொதுத்துறை வங்கிகளின் பங்கு மட்டும் 63%ஆக உள்ளது. இதில் அதிக கடன் யாருக்கு தள்ளுபடி செய்யப்பட்டது என்ற விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.