மாற்றி யோசித்து கவனம் ஈர்த்து வரும் ஏர் இந்தியா..

அமெரிக்காவுக்கும் -சீனாவுக்கும் இடையே வர்த்தகப்போர் வலுவடைந்து வரும் நிலையில், அமெரிக்க தயாரிப்பான போயிங் நிறுவன விமானங்களை வாங்குவதை சீனா தவிர்த்து வருகிறது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டுள்ள ஏர் இந்தியா நிறுவனம், அந்த விமானங்களை அவசரமாக வாங்கும் பணிகளை செய்து வருகிறது. டாடா குழுமத்துக்கு விமானங்கள் உடனடியாக தேவை என்பதால் இந்த டீல் அரங்கேறியுள்ளது. சீனா தங்கள் நாட்டுக்கு வர இருந்த போயிங் நிறுவன ஆர்டர்களை நிறுத்தியுள்ள நிலையில், அதனை தங்களுக்கு தரும்படி மலேசிய விமான நிறுவனங்களும் போயிங்கிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. 10 விமானங்கள் உற்பத்தி செய்து டெலிவரி கொடுக்கும் நேரத்தில் பரஸ்பர வரி விதிப்பு நடந்ததால் அவை டெலிவரி செய்வதில் சிக்கல் எழுந்தது. சீன நிறுவனங்களுக்கென வடிவமைக்கப்பட்ட விமானங்கள் பிறநாடுகளுக்கு பொருந்துமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அமெரிக்காவுக்கும்-சீனாவுக்கும் இடையே நடந்து வரும் வர்த்தகப் போரால் ஐரோப்பாவைச் சேர்ந்த ஏர்பஸ் நிறுவனத்துக்கு சீனா அதிக ஆர்டர்களை கொடுத்துள்ளது. இந்த நிலையில்தான், சீனாவுக்காக உருவாக்கப்பட்ட தயார் நிலையில் உள்ள நேரோபாடி வகை விமானங்களை வாங்க ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது.
வரும் ஜூன் மாதம் 737 வகையைச் சேர்ந்த 50 விமானங்களை டெலிவரி எடுக்க ஏர் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பெங்களூருவுக்கு எடுத்துவரப்பட உள்ள விமானங்கள் மீண்டும் ஒரு முறை பெயின்ட் செய்யப்பட இருக்கிறது. இண்டிகோ நிறுவனத்துடனான போட்டியில் வெற்றி பெற ஏர் இந்தியா நிறுவனத்துக்கு தற்போது அதிகளவிலான விமானங்கள் தேவைப்படுகின்றன. இந்த நிலையில் ஏற்கனவே கொடுத்த ஆர்டர்களும் அடுத்தாண்டு மார்ச் மாதம் தான் விமானமாக கிடைக்கும் என்பதால் சீனாவுக்காக வடிவமைக்கப்பட்ட விமானங்களை தங்களுக்கு அளிக்க ஏர் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.