ஐடிசி பங்குகளை விற்க தயாராகும் BAT
லக்கி ஸ்ட்ரைக் என்ற சிகரெட்டின் உற்பத்தியாளர் நிறுவமான பிரிட்டிஷ் அமெரிக்கன் டொபாக்கோ நிறுவனம். இதை சுருக்கமாக BAT என்பார்கள். அந்த நிறுவனம் ஐடிசியின் பங்குகளை வைத்திருக்கும் முக்கிய நிறுவனமாகும். இந்நிலையில் இந்தவாரத்திலேயே BAT தன் வசம் இருக்கும், ஐடிசி நிறுவன பங்குகளை விற்றுவிடும் என்றும் விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். BAT நிறுவனத்தில் இருந்து 2 அல்லது 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள பங்குகள் வெளியாகும் என்றும் இது தொடர்பாக பேங்க் ஆஃப் அமெரிக்காவுடன் BAT பேசி வருவதாக கூறப்படுகிறது. சந்தை நிலவரத்தை தெரிந்துகொண்டு எந்த நேரமும் எந்த அறிவிப்பையும் அந்நிறுவனம் வெளியிடும் என்று கூறப்படுகிறது. ஐடிசி நிறுவனத்தின் பங்குகளில் 29 விழுக்காடு பங்குகளை BAT நிறுவனம் வைத்திருக்கிறது. அந்த பங்குகளை அப்படியே பணமாக மாற்றவும் பாட் திட்டமிட்டுள்ளதாம். உணவுப்பொருட்கள், சிகரெட் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஐடிசி நிறுவனம் கொடி கட்டி பறந்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக ஐடிசி நிறுவனத்தின் பங்குகள் 11 விழுக்காடு வரை சரிந்து உள்ளன. இதுபற்றி பாட், பேங்க் ஆஃப் அமெரிக்கா மற்றும் சிட்டி குழுமம் ஆகிய எந்த பெரிய நிறுவனங்களும் கருத்துகளை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்