சந்தைகள் சரிய காரணம் என்ன?
இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து சரிவு சந்திக்க தொடங்கி உள்ளன. அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதம் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், சந்தைகளில் சரிவு ஏற்பட தொடங்கி உள்ளது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் கடந்த 2 வர்த்தக நாட்களில் சுமார் 1000 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது. அதே போல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டியும் ஒரு சதவிதத்திற்கு மேல் சரிந்துள்ளது.
இந்த சரிவு மேலும் தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இன்றும் (23-8-23) பங்குச்சந்தைகள் சரிவுடன் தான் வர்த்தகத்தை தொடங்கும் என கணிப்புகள் வெளியாகி உள்ளன. எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள், கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதன் விலை சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் வட்டி விகிதத்தை உயர்த்துவது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்க உள்ளது. இதன் படி, வரும் செப்டம்பர் மாதம் வட்டி விகிதம் 0.25 சதவிதம் வரை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.