BoAt-ன் தாய் நிறுவன ஐபிஓ அப்டேட் இது..

பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் போட் என்ற எலெக்ட்ரானிக்ஸ் பொருள் தயாரிக்கும் பிராண்டின் தாய் நிறுவனமான இமேஜின் மார்க்கெட்டிங் நிறுவனம்,ஆரம்ப பங்கு வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. ஐபிஓ மூலமாக அந்த நிறுவனம் 2ஆயிரம் கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. போட் நிறுவனம் ஆரம்ப பங்குகளை வெளியிட முயற்சிப்பது இது இரண்டாவது முறையாகும். கடந்த 2022-ல் இந்த நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்ட நிலையில், அந்த நேரத்தில் சந்தை நிலவரம் சரியில்லாததால் கடைசி நேரத்தில் அதனை பின்வாங்கியது. எனினும் பண தேவை காரணமாக தனியார் நிறுவனத்திடம் 60மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியை போட் நிறுவனம் பெற்றது. புதிய ஈக்விட்டி பங்குகளாக 900 கோடி ரூபாய் திரட்டவும், ஏற்கனவே வைத்துள்ள பங்குகளை விற்று ஆயிரத்து 100 கோடி ரூபாய் வசூலிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. செபியின் விதிகளுக்கு உட்பட்டு தேசிய அளவிலான செய்தித்தாள்களில் விளம்பரங்களையும் போட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. திரட்டும் நிதி மூலமாக ஏற்கனவே உள்ள கடன்களை அடைத்துவிட்டு, வியாபாரத்தை வளர்க்கவும், ஆய்வுகளை மேம்படுத்தவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும் பொருட்களின் தரத்தை மேம்படுத்தவும், நிறுவன செலவுகளை கவனிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
நிதி திரட்டும் போட் நிறுவனத்துக்கு உதவியாக ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ், கோல்ட்மேன் சாச்ஸ், நோமுரா ஆகிய நிறுவனங்கள் லீட் மேலாளர்களாக இயங்க இருக்கின்றனர்.