பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள பட்ஜெட் 2024.,
2024 ஆண்டும் பிறந்து ஒரு மாதமும் முடியப்போகிறது. இன்னும் பட்ஜெட் தயாரிப்பு பணிகள் குறித்த அறிவிப்புகள் தகவல்கள் இல்லாமல் இருந்தால் எப்படி.., இதோ தருகிறோம்.. உலகிலேயே பெரிய உற்பத்தி மையாமாக இந்தியாவை மாற்ற பணிகள் நடைபெற்று வருவதாக பிரதமர் மோடி தலைமையிலான அரசு தெரிவித்து வருகிறது. ஆனால் இடைக்கால பட்ஜெட் உலகத் தரத்துக்கு இருக்குமா? உண்மையிலேயே சீனாவை இந்தியா உற்பத்தித்துறையில் மிஞ்சுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக இந்தியாவில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் உற்பத்தி துறையை வலுப்படுத்தி அதனை உள்நாட்டு உற்பத்திக்கு பங்களிப்பு செய்ய பணிகள் நடந்து வருகிறது. தற்போது 17 விழுக்காடாக இருக்கும் இந்த விகிதத்தை விரைவில் 25 விழுக்காடாக மாற்ற முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. கொரோனா காலகட்டத்தில் மத்திய அரசால் 2020-ல் கொண்டுவரப்பட்டது தான் உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை திட்டம். இந்த உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை திட்டம் 14 துறைகளில் மட்டும் 3 முதல் 5 விழுக்காடு வரை ஊக்கத் தொகை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் பிரதான நோக்கமே இறக்குமதியை குறைத்து ஏற்றுமதியை அதகரிப்பதுதான். உற்பத்தித்துறை மற்றும் ஏற்றுமதித்துறையை வலுப்படுத்தி உலகத்தரத்துக்கு உயர்த்த புதிய தொழில் கொள்கை அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. 1956,1991 ஆண்டுகளுக்கு பிறகு இதுபோன்றதொரு முயற்சி முன்னெடுக்கப்படுகிறது. உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை திட்டம் ஒரு தோல்வியடைந்த திட்டமாக ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் குறிப்பிட்டுள்ளார். இந்த நேரத்துக்கு உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகைக்கு பதிலாக பிரத்யேக தொழில்கொள்கைதான் முக்கியம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போதுள்ள உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை திட்டம் மருந்து, டெலிகாம், ஆட்டோமொபைல், அட்வான்சுடு பேட்டரி செல் உள்ளிட்ட துறைகளில் கவனம் செலுத்துகிறது. உண்மையில் இந்தியாவை விட சீனா அனைத்து பொருட்களையும் மலிவு விலையில் உற்பத்தி செய்கிறது. பிரத்யேக கொள்கை இருந்தால்தான் இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு அதிகரிக்கும் என்பது நிபுணர்கள் கருத்து.
இந்தியாவில் அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் இளைஞர்களுக்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருவதால் அவர்களுக்கு வேலைவாய்ப்பு என்பது இல்லாத விகிதம் 10.05 விழுக்காடாக உள்ளது. HSBC நிறுவன தரவுகளின்படி, இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.5 விழுக்காடாக உள்ளது. 7கோடி புதிய வேலைவாய்ப்புகள் அடுத்த 10 ஆண்டுகளில் உற்பத்தி செய்ய வேண்டுமாம். உள்ளூர் நிறுவனங்கள் சர்வதேச நிறுவனங்களுடன் போட்டி போடும் அளவுக்கு வளர்ந்துவிட்டால் இது சாத்தியம் என்கிறார்கள் நிபுணர்கள். உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகையை காரணம் காட்டி, பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊக்கத் தொகை திட்டத்தால் பலகோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. என்ன நடக்குமோ?பட்ஜெட்டில் தெரிந்துவிடும்.