முதலீடுக்கு பிஒய்டி தயார் ஆனால் ஒரு சிக்கல்..

சீன மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான பிஒய்டி நிறுவனம் இந்தியாவில் தனது உற்பத்தி ஆலையை நிறுவ பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ள நிலையில், அந்நிறுவன அதிகாரிகள் இந்தியாவிற்கு வர விசாவே கிடைக்கவில்லை. அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனத்தை விட அதிக மின்சார கார்களை விற்று வரும் பிஒய்டி நிறுவனம் தெலங்கானாவில் தனது ஆலையை அமைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் இது பற்றி விளக்கம் அளித்துள்ள அந்த நிறுவனம், தங்கள் நிறுவனம் இந்தியாவுக்கு வர ஆர்வமாக இருந்தாலும் , விசா கூட கிடைக்கவில்லை என்று ஆதங்கப்பட்டுள்ளனர். அதே நேரம் பிஒய்டி நிறுவனம் முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொள்ளவும் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. ஏற்கனவே இதேபோன்ற ஒரு முயற்சியை மத்திய அரசு கடந்த 2023 ஆம் ஆண்டு தடுத்து நிறுத்தியது. இந்தியாவை பெரிய மார்க்கெட்டாக பார்க்கும் பிஒய்டி நிறுவனம் கடந்தாண்டில் மட்டும் 43லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது. இந்தாண்டு இந்த எண்ணிக்கை 55லட்சம் கார்களை அந்நிறுவனம் விற்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே வியட்நாமைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட் கார் நிறுவனம் தூத்துக்குடியில் தனது ஆலையை தொடங்க இருக்கும் நிலையில், மத்திய அரசுக்கு பிஒய்டி நிறுவன அதிகாரிகள் விசா கோரி விண்ணப்பித்துள்ளனர். இந்த விசாவுக்கு இதுவரை மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை.