எத்தனால் கலந்ததால் எத்தன கோடி லாபம் தெரியுமா?
காலநிலை மாற்றத்தையும் கார்பன் உமிழ்வையும் குறைக்கும் நோக்கில் படிம எரிபொருளை கொஞ்சம் கொஞ்சமாக நீக்கி பசுமை ஆற்றலை பல நாடுகளும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. இதில் இந்தியாவின் பங்கு மிகவும் முக்கியமானது. இதன் முன்னெடுப்பாக பெட்ரோலுடன் எத்தனால் என்ற சாராயம் கலக்கப்படுகிறது. இதனை பெட்ரோலுடன் கலந்து இயக்கும்போது இந்தியாவில் 2022-23 நிதியாண்டில் மட்டும் 24ஆயிரத்து 300 கோடி ரூபாய் மிச்சமாகியுள்ளதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார். எண்ணெய் வணிக நிறுவனங்களால் இதன் மூலம் 509 கோடி லிட்டர் பெட்ரோல் வாங்குவது தடுக்கப்பட்டுள்ளதாம். பெட்ரோலில் மட்டுமே 19,300 கோடி ரூபாய் அளவுக்கு விவசாயிகளு்கு லாபம் கிடைத்திருக்கிறதாம். இப்படி எத்தனால் கலப்பதால் மொத்த கரியமில வாயு வெளியேற்ற அளவு என்பது 108 லட்சம் மெட்ரிக் டன்னாக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஊக்கத் தொகையையாக ஒரு லிட்டர் எத்தனாலால் 6.87 ரூபாய் லாபம் கிடைத்திருக்கிறதாம். சி மொலாசஸ் என்ற பொருளில் இருந்து எத்தனால் தயாரிக்கப்படுகிறது. இது விவசாயிகளிடம் இருந்து கரும்பு வாங்கி அதனை சர்க்கரையாக மாற்றும்போது கிடைக்கும் உப பொருளாகும். இதனை ஆக்கபூர்வமாக மாற்றியதால் பெட்ரோல் பயன்பாடு கணிசமாக குறைந்திருக்கிறது.
ஏப்ரல் 2023 முதல் 20 விழுக்காடு எத்தனால் கலந்து பயன்படுத்தும் திட்டம் அமலுக்கு வந்துள்ளது. 2029-30 ஆண்டு காலகட்டத்தில் இதனை 30 விழுக்காடாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் கரியமில வாயு வெளியேற்றமில்லா எரிபொருள் பயன்பாடு 2070 ஆம் ஆண்டு சாத்தியப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இந்தியா தற்போது 3 ஆவது அதிக ஆற்றல் பயன்பாட்டு நாடாகவும், உலகிலேயே எல்பிஜி அதிகம் பயன்படுத்தப்படும் 3 ஆவது நாடாகவும், 4 ஆவது பெரிய ஆட்டோமொபைல் சந்தையாக உலகத்தில் இந்தியா இருப்பதாகவும் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். இயற்கை எரிவாயு துறையில் தற்போதுள்ள 6.3 பங்களிப்பை 15 விழுக்காடாக உயர்த்தவும், இதற்கான முதலீடாக 67 பில்லியன் அமெரிக்க டாலர்களை அடுத்த 5-6 ஆண்டுகளில் முதலீடு செய்யவும் திட்டமிட்டுள்ளதாக ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.