குறைகிறதா அமெரிக்க கார்கள் மீதான வரி..?

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும்போது, இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்குள் வரும்பொருட்களுக்கு மட்டும் ஏன் குறைவான வரி விதிக்கவேண்டும் என்ற நியாயமான கேள்வியை அமெரிக்க அதிபர் டிரம்ப் அண்மையில் மோடியின் முன்னிலையிலேயே கேள்வி எழுப்பியிருந்தார். இதையடுத்து இந்தியாவில் விற்கப்படும் அமெரிக்க போர்பன் வகை விஸ்கிகளின் மீதான வரியை 150-ல் இருந்து 100%ஆக இந்தியா குறைத்தது. இந்த சூழலில் பெரும்பாலான அமெரிக்க பொருட்களின் மீதான வரியை குறைப்பது குறித்து மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள், ரசாயனங்கள், அரிதான மருந்துப்பொருட்கள் மீதான வரியை மத்திய அரசு குறைக்க திட்டமிட்டுள்ளது. அமெரிக்கா சென்ற மோடியின் முகத்துக்கு நேராகவே அதிக வரியை இந்தியா விதிப்பதாக டிரம்ப் கூறியிருந்த நிலையில், இந்தியா-அமெரிக்கா இடையேயான நல்லுறவை மேம்படுத்தும் நோக்கில் வரிகள் குறைப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. பதிலுக்கு பதில் வரி விதிக்கும் அமெரிக்காவின் நடவடிக்கைகள் குறித்து ஆராய மத்திய வணிக வரி மற்றும் தொழில்துறை அமைச்சகத்தில் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அதிக ஆற்றல் மற்றும் ஆயுதங்களை இந்தியாவுக்கு அளிக்க அமெரிக்கா விரும்பி வருகிறது. ஆட்டோமொபைல், விவாசயப் பொருட்களை இந்தியாவில் அதிகம் விற்க அமெரிக்கா ஆர்வம் காட்டி வருகிறது. இந்த சூழலில் அமெரிக்காவில் இருந்து எந்தெந்த பொருட்களை இறக்குமதி செய்வது என்ற பட்டியலை இந்தியா தயாரித்து வருகிறது. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்பட்டால் சீனாவில் இருந்து மலிவு விலை பொருட்கள் அதிகம் புழங்கும் என்ற அச்சமும் எழுந்துள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவும் அமெரிக்காவும் 500 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள வணிகம் மேற்கொள்ள ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2023-ல் இந்த அளவு 127 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்துள்ளது.