டிவிட்டர் ஊழியர்களை கசக்கி பிழியும் எலான் மஸ்க்…

டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கினாலும் வாங்கினார் அவர் பற்றிய செய்திகள் தினமும் கட்டுக்கு
அடங்காமல் வந்து கொண்டே இருக்கின்றன. அண்மையில் டிவிட்டர் நிறுவனம் புளூ டிக் முறை பற்றிய அறிவிப்பை
வெளியிட்டது. இந்த நிலையில் டிவிட்டர் நிறுவனத்தில் பணியாற்றும் நபர் வாரத்தில் ஏழு நாட்களும், 12 மணி நேரமும் உழைக்க மஸ்க் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூடுதல் நேரம் வேலை பார்த்தால் அதற்கான சம்பளம்
பற்றியெல்லாம் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.. வேலையை விட்டு தூக்கிவிடுவார்கள் என்று அஞ்சியபடியே அங்கு பொறியாளர்கள் பணி செய்து வருவதாக கூறப்படுகிறது. 50 விழுக்காடு பணியாளர்களை மட்டுமே பணியில் வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ள மஸ்க் அவர்களை வீட்டுக்கு அனுப்ப இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. டிவிட்டர் நிறுவனத்தில் இயக்குநர்களாக இருந்தவர்கள் ஒரே நேரத்தில் தங்கள் வேலையை ராஜினாமா செய்துள்ள நிலையில்
டிவிட்டரின் ஒரே இயக்குநராக மஸ்க் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எலான் மஸ்க்கின் அதிரடி நடவடிக்கைகளால் அச்சமடைந்துள்ள விளம்பரதாரர்கள் டிவிட்டரில் விளம்பரம் அளிக்க தயங்கி வருகின்றனர். ஏற்கனவே டெஸ்லா நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்கள் திடீரென நீக்கப்படுவதும், அவர்களுக்கான பணபலன்கள் கிடைப்பதற்கு முன்பே அவர்களை பணி நீக்கம் செய்வதையும் மஸ்க் வாடிக்கையாக கொண்டுள்ளார் என்பதால் டிவிட்டர் நிறுவன பணியாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.