8ஆயிரம் கோடி ரூபாய் வசூலிப்பது ஏன்?
டெல்லி-ஜெய்ப்பூர் இடையேயான சாலையில் 8ஆயிரம் கோடி ரூபாய் சுங்கக் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. ஆனால் இந்த சாலை அமைக்க மொத்தமே 1900 கோடி ரூபாய்தான் தேவைப்பட்டது என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பதில் பெறப்பட்டது. இது சம்பந்தமாக மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் கேள்விகள் முன்வைக்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர், கடன்வாங்கிதான் சாலைகள் அமைக்கப்படுவதாகவும், சாலைகள் அமைக்கும்போது பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி இருப்பதாகவும் கூறினார். மேலும் லோன் எடுத்து ஒரு வீடு கட்ட இரண்டரை லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது என்றால், அந்த வீட்டை கட்டி முடிக்கையில் 5முதல் 6 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது என்றும் உதாரணத்தை சுட்டிக்காட்டி பேசினார். டெல்லி-ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2009-ல் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கூறிய அவர், 9வங்கிகளிடம் இருந்து கடன் வாங்கியுள்ளதாகவும், ஏராளமான ஒப்பந்ததாரர்கள் ஓடிவிட்டதாகவும், தங்கள் அரசு அதை நடத்தி முடித்திருப்பதாகவும் கூறினார். 5 ஆவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா இருக்கும் நிலையில் விரைவில் இந்தியா 3 ஆவது பெரிய பொருளாதார நாடாக உயரும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பிரதமராக நரேந்திர மோடி ஆட்சி அமைத்து 100 நாட்கள் ஆகியுள்ள நிலையில் 51,000 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களுக்கு ஒப்புதல் கிடைத்திருப்பதாகவும், வரும் மார்ச் மாதத்துக்குள் 3லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்கள் நிறைவடையும் என்றும் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.