பெரிதாக வீழ்ந்த தங்கம்..
சர்வதேச அளவில் தங்கம் விலை கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு கடந்த வெள்ளிக்கிழமை வீழ்ந்தது. அதற்கு பிரதான காரணிகளாக வலுவான அமெரிக்க டாலர் மற்றும் டொனால்டு டிரம்ப் மீண்டும் அதிபராக தேர்வானது உள்ளிட்டவையே.. சர்வதேச அளவில் ஸ்பாட் கோல்டின் மதிப்பு 2,684 அமெரிக்க டாலர்களாக வீழ்ந்தது. அமெரிக்க வருங்கால தங்கம் மதிப்பும் விழுந்து 2694 டாலர்களாக சரிந்தது. கடந்த மாதம் அமெரிக்காவில் தேர்தல் தொடர்பான சிக்கல்கள் இருந்த நிலையில் தற்போது தேர்தல் முடிந்துள்ளது. அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் கடன்கள் மீதான வட்டியை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்ததும் தங்கத்தின் விலை தாக்கமடைய முக்கிய காரணியாக அமைந்தது. டிரம்ப் வெற்றி பெற்றுள்ள நிலையில், அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ், தனது வட்டி விகித குறைப்பை தொடருமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. டிரம்ப் தேர்வு செய்யப்பட்டாலும் நிதி கொள்கையில் மாற்றம் இருக்காது என்று அமெரிக்க பெடரல் ரிசர்வ் தெரிவித்துள்ளது. டிசம்பர் மாதத்தில் ஒரு வட்டிக்குறைப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 2,700 அமெரிக்க டாலர்கள் வரை தங்கம் எட்ட வாய்ப்புள்ளது. இந்தியாவில் தங்கம் மீதான மோகம் குறைந்துள்ளபோதும், ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் அதிகளவில் தங்கத்தை வாங்கி குவிக்கின்றன. தங்கம் போலவே வெள்ளியின் விலையும் ஒரு அவுன்ஸ் 2.4 விழுக்காடு குறைந்து, 31.22 டாலர்களாக உள்ளது. பிளாட்டினம் 2.9 விழுக்காடு குறைந்து 968 டாலர்களாக வீழ்ந்துள்ளது. பலாடியம் 3.5விழுக்காடு குறைந்து 988 டாலர்களாக உள்ளது. இந்த 3 உலோகங்களும் கடந்த வெள்ளிக்கிழமை பெரிதாக வீழ்ந்தன.