கோல்டுமேன் சாச்ஸ் எச்சரிக்கை
அமெரிக்காவில் பிரபல நிறுவனமான கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனம் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதில் உலகளவில் பங்குச்சந்தைகள் எப்படி வீழ்ச்சியில் இருந்து மீண்டன என்பதை கவனிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. பிரபல சிஎன்பிசி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனத்தின் கிறிஸ்டியன் மியூலர், ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் ஏற்பட்ட சரிவை எப்படி உடனே மறந்துவிட முடியும் என்றும், இது ஒரு எச்சரிக்கை என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் அமெரிக்க பங்குச் சந்தைகள் 3 விழுக்காடு வரை நஷ்டத்தை சந்தித்தன. ஜப்பானில் வரலாறு காணாத அளவுக்கு பங்குகள் வீழ்ச்சியை கண்டிருந்தன. அமெரிக்க பெடரல் ரிசர்வ் தனது கடன்கள் மீதான வட்டி விகிதத்தை குறைக்கும் என்ற அறிவிப்பும், அமெரிக்க பொருளாதார புள்ளி விவரங்களும் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தின. 3 விழுக்காடு விழுந்த பங்குகள், 8 விழுக்காடு அளவுக்கு உயர்ந்தன. ஐரோப்பா மற்றும் சீனாவின் வளர்ச்சிகள் நெகட்டிவாக உள்ளதையும் அவர் குறிப்பிட்டார். முதலில் கடன் பத்திரங்களின் அளவு அதிக பாதிப்பை சந்தித்திருந்த நிலையில் தற்போது அது சமநிலையை ஓரளவு சந்தித்து உள்ளதாக கூறியுள்ளார். அமெரிக்காவில் வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் கூட்டம் நடைபெற இருக்கிறது. அதில் கடன்கள் மீதான வட்டி விகிதம் குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.