சீனாவை நம்பாத முதலீட்டாளர்கள்..
இந்திய பங்குச்சந்தைகளில் கடந்த சில நாட்களாக கடும் சரிவு நேரிட்டு வருகிறது. இந்தத நிலையில் இந்தியாவில் இருந்து பணத்தை எடுத்துக்கொண்டு செல்லும் முதலீட்டாளர்கள் அவற்றை மீண்டும் நம் பக்கத்து நாடான சீனாவில் கொண்டு போய் கொட்டி வருகின்றனர். கடந்தமாதம் மட்டும் அந்த நாட்டு பங்குச்சந்தைகள் 35விழுக்காடு வரை உயர்வை கண்டுள்ளன. அந்நாட்டில் அண்மையில் அளிக்கப்பட்ட பொருளாதார மீட்பு தொகுப்பு, பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சீனாவில் கட்டுமானத்துறை மீண்டும் வளருமா என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்தியாவில் இருந்து எடுத்த முதலீடுகளை சீனாவில் சிலர் முதலீடு செய்தாலும், பலருக்கு சீன நிறுவனங்கள் மற்றும் பங்குச்சந்தைகள் மீது பெரிய அளவுக்கு நம்பிக்கை இல்லை. சீனப் பங்குச்சந்தைகளில் பங்குகளின் மதிப்பு வழக்கத்தைவிட அதிகமாக இருப்பதாகவும் இதனால் முதலீடு செய்யத் தயங்குவதாகவும் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பொருளாதார மீட்பு தொகுப்புகள் மட்டுமே போதாது என்று கூறும் முதலீட்டாளர்கள், வலுவான திட்டங்களை சீனா வகுக்காமல், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெற முடியாது என்றும் கூறியுள்ளனர். சீன சந்தைகளில் பெரிய அளவு நம்பகத்தன்மை இருக்காது என்றும், குறுகிய கால முதலீடுகளை மட்டும் முதலீட்டாளர்கள் செய்துவிட்டு பின்னர் மீண்டும் வேறு நாடுகள் பக்கம் திரும்ப வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள் கணிக்கின்றனர்.