ஹியூண்டாய் ஐபிஓ ஒரு பங்கு எவ்வளவு தெரியுமா..
இந்தியாவின் மிகப்பெரிய ஆரம்ப பங்கு வெளியீடு என்ற பெருமையை பெற்றுள்ள ஹியூண்டாய் ஐபிஓ, அடுத்த வாரம் வெளியிடப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஒரு பங்கின் விலை 1865 முதல் 1960 ரூபாயாக இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ஹியூண்டாய் நிறுவனத்தின் மதிப்பு மட்டும் 19 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். இதுவே இந்தியாவின் மிகப்பெரிய பொது வெளியீடாகும். 25,000 கோடி ரூபாய் தேவைப்படும் நிலையில் வரும் 22 ஆம் தேதி இதனை பங்குச்சந்தையில் பட்டியல் இட வைக்க முயற்சிகள் நடைபெற இருக்கின்றன. நிறுவன முதலீட்டாளர்களுக்கு வரும் 14 ஆம் தேதி முதலும், சில்லறை வணிகர்களுக்கு வரும் 15 முதல் 17 ஆம் தேதிக்குள் முதலீடு செய்ய வாய்ப்பளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. மற்ற துறை பங்குச்சந்தை ஐபிஓவை விட இது முற்றிலும் மாறுபட்டது. அதாவது 17.5விழுக்காடு பங்குகளைத்தான் ஹியூண்டாய் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இதனால் புதிய பங்குகள் விற்கப்படாது. இந்தியாவின் இரண்டாவது பெரிய கார் தயாரிப்பு நிறுவனம் என்ற பெருமையை ஹியூண்டாய் பெற்றுள்ளது. ஏற்கனவே கடந்த 2022-ல் எல்ஐசி நிறுவனம் 21,000 கோடி ரூபாய் அளவுக்கு ஐபிஓ வெளியிட்டதுதான் இந்தியாவின் அதிகபட்ச வசூலான தொகையாக இருந்தது. அதனை மிஞ்சுவதற்காக ஹியூண்டாய் ஐபிஓ காத்திருக்கிறது. தென் கொரியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஹியூண்டாய் நிறுவனம் அந்நாட்டு பங்குச்சந்தையில் ஓராண்டில் 34விழுக்காடு லாபத்தை ஈட்டியுள்ளது.