“அழகாய் மிதக்கும் இந்திய பொருளாதாரம்..”
ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸ் இந்திய பொருளாதாரம் குறித்து அண்மையில் பேசியுள்ள கருத்து வைரலாகியுள்ளது. உலகளவில் நிகழ்ந்து வரும் பல்வேறு மாற்றங்களுக்கு மத்தியில் இந்திய பொருளாதாரம் அழகாக படகு போல சமூகமாக மிதந்து பயணிப்பதாக அவர் பேசியுள்ளார். இந்திய பொருளாதாரம் நிலையாக வலுவாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ரிசர்வ் வங்கியின் பல்வேறு முயற்சிகளால் இது சாத்தியமானதாக தனியார் தொலைக்காட்சிக்கு சக்தி காந்ததாஸ் பேட்டி அளித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களில் ஏற்பட்ட பாதிப்பு, பெருந்தொற்று நேரத்தில் ரிசர்வ் வங்கி எடுத்த துரித நடவடிக்கைகளையும் அவர் பட்டியலிட்டார். இந்த நடவடிக்கைகளால் இந்திய பொருளாதாரம் நிலைத்தன்மை பெற்றுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்., எளிதில் வளைந்து கொடுக்கும் தன்மையுடனும், பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையிலும் பொருளாதார நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். உலகளவில் உயர்ந்து வரும் பணவீக்கம், மெதுவான வளர்ச்சி மற்றும் அரசு பத்திரங்களின் வட்டி விகிதம் அதிகம் கிடைக்கும் விதம் உள்ளிட்டவை குறித்து பேசிய அவர், தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் விலை குறித்தும் தனது கருத்தை வெளிப்படுத்தினார். அதில் இந்தியாவின் கொள்கைகளால் கடந்த செப்டம்பரில் விலைவாசி உயர்வு மிதமான அளவில் இருந்ததாக குறிப்பிட்டார். மேலும் நடப்பு நிதியாண்டில் ஆடைகள் ஏற்றுமதி மீண்டுள்ளதாகவும், டிஜிட்டல் பேமன்ட்ஸ் காரணமாக இது சாத்தியமாகியுள்ளதாகவும் தாஸ் குறிப்பிட்டார், காலநிலை மாற்றம் குறித்து விரைவில் ரிசர்வ் வங்கி ஒரு வழிகாட்டு நெறிமுறையை வகுக்க இருப்பதாக கூறிய அவர், எதிர்வரும் சவால்கள் குறித்து நிதி நிறுவனங்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்க கொண்டார். வங்கித்துறை நிலைத்தன்மை மற்றும் பொருளாதார வளர்ச்சி இரண்டிலும் சமநிலை இருக்க வேண்டும் என்றும், மாறிக்கொண்டே இருக்கும் உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் பொருளாதார அடிப்படை வலுவாக இருப்பதாகவும் சக்தி காந்ததாஸ் கூறினார்.