இடைக்கால டிவிடண்ட் ரூ.26 அளிக்கத் திட்டமிட்ட நிறுவனம்..

தங்க நகை அடகு வைத்துக்கொண்டு நிதி அளிக்கும் பிரபல நிறுவனமான முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு ஒரு பங்குக்கு 26 ரூபாய் இடைக்கால டிவிடன்ட்டாக அளிக்க திட்டமிட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு கூட்டம் திங்கட்கிழமை கூடியது. இதில் நிறுவனத்தின் 4 ஆம் காலாண்டு முடிவுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அதேபோல் ஒவ்வொரு பங்குதாரருக்கும் எவ்வளவு பணம் டிவிடண்ட்டாக அளிக்க வேண்டும் என்பது குறித்தும் இறுதி முடிவெடுக்கப்பட்டது. அதன்படி முகப்பு மதிப்பு 10 ரூபாய் கொண்ட ஒரு பங்குக்கு 26 ரூபாயை டிவிடண்ட்டாக 2024-25 நிதியாண்டு முழுமைக்கும் அளிக்க முடிவெடுக்கப்பட்டது. கடன் வாங்குவதற்கான வரம்பை 2லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தவும் இயக்குநர்கள் குழுவில் முடிவெடுக்கப்பட்டது. டிவிடண்ட் அளிக்கும் முடிவுக்கும், கடன் வரம்பை உயர்த்தும் முடிவுக்கும், பங்குதாரர்களிடம் கருத்துகள் கேட்கப்பட இருக்கின்றன. இதுமட்டுமின்றி முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் சுதந்திரமான இயக்குநராக ஜார்ஜ் ஜோசப் என்பவரை நியமிக்கவும் இயக்குநர்கள் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனம் தனது அதிகாரபூர்வ செய்திக்குறிப்பில் அறிவித்துள்ளது. இவை அனைத்துக்கும் பங்குதாரர்களின் ஒப்புதல் அவசியமாகிறது.