மீண்டும் புயலை கிளப்பும் நாராயண மூர்த்தி..
வாரத்தில் 70 மணி நேரம் வேலை செய்தால்தான் இந்தியா முன்னேறும் என்று பேசி சர்ச்சையில் சிக்கியிருந்தார் இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நாராயணமூர்த்தி, இவர் அண்மையில் மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய விவாதத்தை தொடங்கி வைத்துள்ளார். அண்மையில் பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நாராயணமூர்த்தி, வழக்கமான வகுப்புகளில் கவனத்துடன் படிக்கும் மாணவர்களுக்கு, கோச்சிங் கிளாஸ் என்பது தேவையே இல்லை என்றும், மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்று பெற்றோர் நிர்பந்திக்கக் கூடாது என்றும், பெற்றோரே படம் பார்த்துக்கொண்டு பிள்ளைகளை அதட்டக் கூடாது என்றும் விமர்சித்துள்ளார். இன்போசிஸ் நிறுவனத்தில் வாரத்துக்கு 85 முதல் 90 மணி நேரம் வரை உழைத்திருப்பதாகவும் அவர் ஏற்கனவே பேசியிருந்தார். ஒழுக்கமான படிக்கும் முறை வீட்டில் இருந்தே தொடங்க வேண்டும் என்றும் நாராயண மூர்த்தி கேட்டுக் கொண்டார். தேர்வுக்காக மாணவர்கள் கோச்சிங் கிளாஸ் செல்வதில் தமக்கு உடன்பாடு இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை குழந்தைகள் படிக்கும்போது டிவியை போடாமல் பெற்றோர் இருக்க வேண்டும் என்றும் தனது வீட்டிலும் அப்படித்தான் இருக்கும் என்றும் தெரிவித்தார்.
இரவு உணவுக்கு பிறகு 9 மணி முதல் 11 மணி வரை மீண்டும் குழந்தைகள் படிப்பார்கள் என்றும் நாராயண மூர்த்தி தெரிவித்தார். கடந்த 2022-ல் வீட்டில் இருந்து வேலை செய்வதற்கும் நாராயணமூர்த்தி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். உற்பத்தித் திறனை அது பாதிக்கும் என்றும் கூறியிருந்தார். இதேபோல் கடந்தாண்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நாராயணமூர்த்தி, நடிகை கரீனா கபூரின் ரசிகர்கள் மோதிக் கொண்டதை சுட்டிக்காட்டி ஒரு விமர்சனத்தை வைத்தார். அதில் கரீனாவுக்கு தனது ரசிகர்களை பற்றி அக்கறை இல்லை என்றும் கூறியிருந்தார். மேலும் பிரபலங்கள் ஆக்கபூர்வமான வகையில் செயல்களை செய்ய வேண்டும் என்றும், ரசிகர்களின் வரவேற்புக்கு ஆதரவு தரவேண்டும் என்றும் பிரபலங்கள் பொறுப்புடன் இருக்க வேண்டும் என்றும் பேசியிருந்தது சர்ச்சையாகியிருந்தது.