செல்லாது… செல்லாது… நாங்க நிதி அமைச்சர் சொன்னது தான் நம்புவோம்!!!!
இந்தியாவின் மூத்த பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,இந்திய பொருளாதாரம் வளர்ந்துவிட்டதாக அவசரப்பட்டு கொண்டாட வேண்டாம் என்றும் இன்னும் நிறைய பணிகள் செய்ய வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். வரும் 2030ம் ஆண்டு வரை இந்திய பொருளாதாரம் 6முதல் 7%அளவுக்கு மட்டுமே வளர வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்திய பொருளாதாரத்தை தீர்மானிப்பதில் மேற்குநாடுகளின் பங்களிப்பும், ரஷ்ய கச்சா எண்ணெய் விலையும் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
நடப்பாண்டில் இந்திய பொருளாதாரம் 6.8 % வளரும் என்றும் அடுத்த நிதியாண்டில் 6.1% வளரும் என்றும் சர்வதேச
நாணைய நிதியம் கணித்துள்ளது. தற்போது இந்தியாவின் கையில் உள்ள தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளை வைத்து நடப்பாண்டை எளிதாக சமாளித்துவிட முடியும் என்றும் அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு முதலீடுகளை சரியாகவும் சீராகவும் வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் என்று கூறியுள்ள அவர் நடப்பாண்டில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், வரும் ஆண்டுகள் மிகவும் சவாலானதாக இருக்கும் என்றும் அவர் கணித்துள்ளார். முன்னதாக இந்திய பொருளாதாரம் குறித்து அண்மையில் பேசி இருந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சர்வதேச அளவில் பொருளாதார நிலை, பாலைவனம் போல் இருந்தாலும், இந்தியா அதில் ஒரு பாலைவனச் சோலை போன்றது என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.