வோடஃபோனில் இருந்து பிஎஸ்என்எலுக்கு மாறும் மக்கள்..
மிகப்பெரிய கடன் சுமையில் சிக்கித்தவிக்கும் வோடஃபோன் நிறுவனம் மாதந்தோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களை இழந்து வருகிறது. இந்நிலையில் மற்ற போட்டி நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல் ரீசார்ஜ் பிளான்களின் விலையை ஏற்றிய நிலையில் வோடஃபோனும் அண்மையில் விலையை உயர்த்தியது. இதனால் கடுப்பான ஒரு சில வாடிக்கையாளர்கள் 3 நிறுவனங்களும் வேண்டாம் என்று அரசுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்லுக்கு மாறியுள்ளனர். ஜூலை மாதத்தில் தனியார் நிறுவனங்கள் ரீசார்ஜ் திட்டங்களுக்கு விலையை உயர்த்திய நிலையில், அரசுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் விலையை ஏற்றவில்லை. வோடஃபோன் நிறுவனத்தில் இருந்து பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ஏராளமானோர் செல்லும் நிலையில், இந்த நகர்வை தீவிரமாக கண்காணிப்பதாக வோடஃபோன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான அக்ஷய மூந்த்ரா தெரிவித்துள்ளார். இந்திய மொபைல் சந்தையில் வோடஃபோன் நிறுவனத்துக்கு 18.6% வாடிக்கையாளர்கள் உள்ளனர். பிஎஸ்என்எல்லில் 7.4%ஆக வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை உள்ளது என்கிறது மத்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம். பல புதிய அப்டேட்களை தர தேவையான நடவடிக்கைகளை வோடஃபோன் எடுத்து வருவதாக மூந்த்ரா தெரிவித்தார். கடந்த ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் வோடஃபோன் நிறுவனத்தின் நிர்வாக செலவில் நஷ்டம் 6,432 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. அதற்கு முந்தைய காலாண்டில் இந்த கடன் அளவு 7,674 கோடி ரூபாயாக இருந்தது. சராசரியாக ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து வோடஃபோன் நிறுவனம் வசூலிக்கும் தொகையானது 146 ரூபாயாக ஒரு மாதத்துக்கு உள்ளது.