அதிக பணவீக்கம்..,குறைவான வளர்ச்சி..

ரிசர்வ் வங்கியின் 26 ஆவது ஆளுநராக வருவாய்த்துறை செயலர் சஞ்சய் மல்ஹோத்ராவை மத்திய அரசு அண்மையில் நியமித்தது. சக்தி காந்ததாஸின் பதவிக்காலம் நேற்றுடன் முடிந்துவிட்டது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, கடந்த 1990 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் பணியை தொடங்கினார். இந்தியாவின் நுகர்வோர் பண வீக்க தகவல் நாளை வெளியாக இருக்கிறது. டெல்லியின் வடக்கு பிளாக்கில் பணியாற்றி வந்த சஞ்சய் தற்போது மும்பைக்கு குடியேற இருக்கிறார். சில்லறை பணவீக்கம் மிகப்பெரிய சவாலாக இருந்து வரும் நிலையில் நவம்பர் மாதத்தின் பணவீக்கம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை கூட்டத்தில் கூறப்பட்ட தாங்கிக்கொள்ளும் அளவான 2 முதல் 6%வரையுள்ள பணவீக்கத்தை உணவுப்பொருட்கள் தீர்மானிக்க உள்ளது. கடந்த அக்டோபரில் சில்லறை பணவீக்கம் என்பது 14 மாதங்களில் இல்லாத வகையில் 6.21%ஆக இருந்தது. காய்கனி விலையேற்றம் என்பது 57 மாதங்களில் இல்லாத வகையில் 42.2%ஆக இருந்தது. நவம்பர் மாதத்தில் 5%ஆக இருக்கும் என்று நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். அதிக விலைவாசி இருந்தால் கடன்கள் மீதான வட்டி குறைப்புக்கான சாத்தியமும் குறைவு. 2025 நிதியாண்டில் பணவீக்கம் என்பது 4.8%ஆக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. 3 ஆவது காலாண்டில் 5.7%ஆகவும், 4 ஆம் காலாண்டில் 4.5%ஆகவும் உயரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி மேலும் குறையும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ள நிலையில் பொருளாதார வளர்ச்சி மற்றும் பணவீக்கம் இரண்டையும் சமநிலைப்படுத்தும் பொறுப்பு சஞ்சய் மல்ஹோத்ராவுக்கு உள்ளது. ரிசர்வ்வங்கியின் அடுத்த நிதி கொள்கை கூட்டம் பிப்ரவரி மாதம் 5 முதல் 7 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. நடப்பு நிதியாண்டின் 3 ஆவது காலாண்டில் பொருளாதாரம் வேகமாக வளரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரியில் நடக்கும் நிதி கொள்கை கூட்டத்தில் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்கள் மீதான ரெபோ வட்டி விகிதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவிலும் அடுத்த மாதம் டிரம்ப் அதிபராக பதவியேற்க இருக்கிறார். இந்த நிலையில் இந்தியாவின் நிதி கொள்கைகள், வரி கொள்கைகளில் மாற்றம் இருக்குமா என்ற ஆவலும் உண்டாகியுள்ளது.