மோசடி கடன் செயலிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுங்க… கெத்து காட்டிய உள்துறை அமைச்சகம்…
இந்தியாவில் கடன் செயலிகள் மிரட்டுவதால் தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் மோசடி கடன் செயலிகள் குறிப்பாக சீன கடன் செயலிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அளித்துள்ளது. சிபிஐ மற்றும் தேசிய புலனாய்வு முகமைக்கும் இந்த சுற்றறிக்கை சென்றுள்ளது. வருவாய் குறைவாக உள்ளவர்களை குறிவைத்து மோசடி செய்து பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. மிரட்டி பணம் பறிக்கும் செயல்களில்
ஈடுபடும் செயலிகளை நடத்தி வருவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இது தேசிய அளவில் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் பொதுமக்களின் நலனை பாதிப்பதாகவும் அந்த கடித்ததில் கூறப்பட்டுள்ளது.
மோசடி செயலிகள் குறித்து கண்டறிய துறைசார்ந்த அதிகாரிகளுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா காலகட்டத்தில் இந்தியர்களில் பலருக்கு பணம் தேவைப்பட்ட நிலையில் இந்த வகை மோசடி செயலிகள் இந்தியாவில் களமிறங்கி, கடன் அளித்துவிட்டு, கடன் பெற்றவர்களை மிரட்டி பணம் பறிப்பதை வாடிக்கயைாக கொண்டுள்ளனர். இந்த மோசடி தொடர்பாக அண்மையில் அமலாக்கத்துறை 9.82 கோடி ரூபாய் மதிப்புள்ள மோசடியை கண்டறிந்தது குறிப்பிடத்தக்கது