வணிக வாகனங்களின் விலையை உயர்த்தும் டாடா..
வரும் 1 ஆம் தேதி முதல் வணிக பயன்பாட்டு வாகனங்களின் விலையை உயர்த்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதுவும் 2 விழுக்காடு வரை உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்த டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்குகள் தற்போது அந்நிறுவன தலைமை அறிவிப்பால் புது உத்வேகம் பெற்றுள்ளது. குறிப்பாக அண்மையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது உற்பத்தி பிரிவை இரண்டாக பிரித்துள்ளது. அதாவது வணிக பயன்பாட்டு வாகனங்கள் மற்றும் பயணிகள் பயன்பாட்டு பிரிவு என்று இரண்டாக பிரிக்க அந்நிறுவன இயக்குநர்கள் குழு இசைவு தெரிவித்துள்ளது. இந்த காரணிகளால் டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்குகள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வந்தன. இந்த சூழலில் உற்பத்தி பொருட்கள் விலையேற்றம் மற்றும் மூலப்பொருட்கள் உயர்வு காரணமாக விலையை உயர்த்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. டாடா மோட்டார்ஸின் வணிக பயன்பாட்டு வாகனங்கள் விலை உயர இருப்பதால் தொழில் முனைவோர் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். அண்மையில் மின்சார வாகன பேட்டரிகளின் விலை சரிந்ததை அடுத்து டாடா மோட்டார்ஸ் தனது வாகனங்களின் விலையை அதிரடியாக குறைத்து ஆச்சர்யம் அளித்திருந்தது. அதேபாணியில் மீண்டும் நடக்குமா என்று வணிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.