பாப்கார்னுக்கு அதிக ஜிஎஸ்டியா….
பாப்கார்னுடன் இனிப்பு மற்றும் காரம் சேர்த்தால் வெவ்வேறு வகையான ஜிஎஸ்டி வரி விதிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன. 2017-ல் அறிமுகம் செய்யப்பட்டது ஜிஎஸ்டி வரி, இந்த நிலையில், பாப்கார்ன் விற்பனையில் 3 வகையான ஜிஎஸ்டி வகைப்படுத்தப்பட்டுள்ளது. வெறும் உப்பு காரம் மட்டும் சேர்த்தால் அதற்கு 5 விழுக்காடும், பிராண்டட் நிறுவன பாப்கார்னாக இருந்தால் அதற்கு 12 விழுக்காடும், கேரமல் எனப்படும் பொருளை சேர்த்தால் அந்த பாப்கார்னுக்கு 18விழுக்காடும் வரி விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அண்மையில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த வரி வரம்பு உயர்த்தியது பற்றி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து தெரிவித்துள்ளார். அதில் சர்க்கரை சேர்க்கப்படும் அனைத்து பொருட்களுக்கும் வித்தியாசமான வரி விதிக்கப்படுகிறது என்றார். இந்த விவகாரம் பற்றி மீம்ஸ்கள் இணையத்தில் பரவி வரும் நிலையில், முன்னாள் பொருளாதார ஆலோசகர் கே.வி. சுப்பிரமணியன் தனது கருத்தை காட்டமாக தெரிவித்துள்ளார். மக்களுக்கு அசௌகர்யம் ஏற்படுத்தும் வகையில் வரிகள் இருக்கக் கூடாது என்றும் கூறியுள்ளார். எளிமைக்கு பதிலாக சிக்கலான வரிவிதிப்பு முறைக்குள் நாம் நுழைந்திருப்பதாக அர்விந்த் சுப்பிரமணியன் கூறியுள்ளார். சப்பாத்தி,கிரீம் பன், தயிர், கிரீம் என பல முறை இந்த வித்தியாசமான வெவ்வேறு வகையான வரிகளால் சர்ச்சை எழுந்திருந்தது குறிப்பிடத்தக்கது.