இதனால்தான் நஷ்டம்,காரணம் சொல்லும் ஏர்டெல்..
5ஜி அதிவேக இணைய சேவை இந்தியாவில் வந்துவிட்டபோதிலும்அது அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்துக்கு பணம் வரவைக்க பெரிய தடையாக தங்கள் நிறுவனத்துக்கு உள்ளதாக ஏர்டெல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கோபால் விட்டல் தெரிவித்துள்ளார். ஏனெனில் 5ஜி வசதியை பயன்படுத்த வெகு சிலரே முன்வந்திருப்பதாக குறிப்பிட்ட அவர், அதனை காசு கொடுத்து பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மிகவும் சொற்பம்தான் என்றார். ஏர்டெல் நிறுவனத்தில் தற்போது வரை ஆறரை கோடி 5ஜி வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஒட்டுமொத்தமாக 5ஜி பயன்பாட்டில் உள்ளவர்களின் எண்ணிக்கை 15 முதல் 16 விழுக்காடாகவே தொடர்கிறது என்றார். அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் இந்த எண்ணிக்கை 25 விழுக்காடாக உயரும் என்றும் அவர் தெரிவித்தார். அந்நிறுவனத்தின் 3 ஆவது காலாண்டு வருவாய் குறித்து நிர்வாகிகளிடம் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதாவது 5ஜி நுட்பம் தற்போது வரை இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது. அதே நேரம் இதனால் மக்களிடம் இருந்து தங்களுக்கு எந்த பணமும் வரவில்லை என்றார். ஏற்கனவே 9 கோடி 5ஜி வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் ஜியோ நிறுவனத்துக்கும் வருவாயில் பெரிய அடி ஏற்பட்டுள்ளது. ஏர்டெல் நிறுவனத்தின் ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து மாதம் ஒன்றுக்கு சராசரியாக 208 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஜியோவைவிட வருவாய் அடிப்படையில் 11விழுக்காடு அதிக லாபத்தை ஏர்டெல் பெற்று வருகிறது. மொத்த லாபத்தில் ஏர்டெல் நிறுவனம் 54 விழுக்காடு கூடுதல் லாபம் பெற்று வருகிறது. ஏர்டெல் நிறுவனத்தின் சந்தை மதிப்பு விரைவில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏர்டெல் நிறுவனத்துக்கு உள்ள கடனில் 50 முதல் 55 விழுக்காடு கடன் இந்தியாவில்தான் இருப்பதாக அந்நிறுவன அதிகாரி விட்டல் தெரிவித்துள்ளார். 2024 நிதியாண்டில் மட்டும் 16,300கோடி ரூபாய் பணத்தை அலைக்கற்றைக்காக ஏர்டெல் நிறுவனம் மத்திய அரசுக்கு அளித்திருக்கிறது என்கிறது மார்கன் ஸ்டான்லி நிறுவனம்